உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை-கலெக்டர் பழனி எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் உாிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பழனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-10-13 18:45 GMT

ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் வெடிபொருள் சட்ட விதிகளின் கீழ் தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக வெடிபொருள் உரிமம் கோருவது, நிரந்தர வெடிபொருள் உரிம நிறுவனங்களை ஆய்வு செய்வது, வெடிபொருள் தயார் செய்வதற்கு படிவம் 20 வரையிலான உரிமம், வெடிபொருள் தடையின்மை சான்று படிவம் 22 வரையிலான உரிமம் மற்றும் வெடிபொருள் விற்பனை செய்யும் படிவம் 24 வரையிலான உரிமம் பெறுவது குறித்து தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அரசாணை வெளியிட்டது. இதுதொடர்பான அனைத்துத்துறை அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில்,

கடும் நடவடிக்கை

அரசாணையில் குறிப்பிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வெடிபொருள் சம்பந்தமான அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில், வெடிபொருள் உரிமம் பெற்ற பகுதிக்கு வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்பு துறையினர் நேரில் சென்று கூட்டாய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும்.அப்போது அதில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உடனடியாக உரிமத்தினை ரத்து செய்ய வேண்டும். அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் வெடிபொருள் உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ், தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் துணை இயக்குனர் பர்வதம் உள்பட மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள், மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள், மாவட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், தீயணைப்பு நிலைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்