முகாம் நடைபெறும் இடங்களில் கலெக்டர் அம்ரித் ஆய்வு

கூடலூரில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட முகாம் நடைபெறும் இடங்களில் கலெக்டர் அம்ரித் ஆய்வு செய்தார்.

Update: 2023-07-21 20:45 GMT

கூடலூர்

கூடலூரில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட முகாம் நடைபெறும் இடங்களில் கலெக்டர் அம்ரித் ஆய்வு செய்தார்.

உரிமைத்தொகை திட்ட முகாம்

கூடலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பெறும் முகாம், வருகிற 24-ந் தேதி நடக்கிறது. இதைத்தொடர்ந்து முகாம் நடைபெறும் இடங்களை கலெக்டர் அம்ரித் ஆய்வு செய்தார்.

மசினகுடி அரசு மேல்நிலைப்பள்ளி, வாழைத்தோட்டம் சமுதாயக்கூடம் ஆகிய இடங்களில் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா? என்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்பிறகு நிருபர்களிடம் கலெக்டர் அம்ரித் கூறும்போது, தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டு உள்ள வழிமுறைகளை பின்பற்றி முகாமில் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கு இணையதள வசதி எவ்வாறு உள்ளது என்று நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

கட்டிட பணிகளை ஆய்வு

இதற்கிடையில் மசினகுடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவேட்டை கலெக்டர் பார்வையிட்டார். மேலும் நடப்பு கல்வி ஆண்டில் வேறு பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகளின் விவரங்களை கேட்டறிந்தார். அவர்கள் வேறு பள்ளியில் சேர்ந்து உள்ளார்களா? என்பதை உறுதி செய்யும்படி ஆசிரியர்களிடம் அறிவுறுத்தினார்.

மேலும் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.3½ கோடி மதிப்பில் 5 பள்ளி வகுப்பறைகள், 4 ஆய்வகங்கள் மற்றும் தலைமை ஆசிரியர் அறை கட்டும் பணியை கலெக்டர் பார்வையிட்டார். பின்னர் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க அலுவலர்களை அறிவுறுத்தினார்.

அப்போது ஊட்டி தாசில்தார் சரவணக்குமார், கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாதுரை, குமார், மசினகுடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்(பொறுப்பு) சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்