குறை தீர்க்கும் கூட்டத்தில் இருந்து கலெக்டர் வெளியேறியதால் பரபரப்பு

Update: 2022-05-28 18:41 GMT

திருப்பூர்:

திருப்பூர் கலெக்டர் அலுவலக குறை தீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் போதுமான இருக்கை வசதியில்லை என்று விவசாயிகள் வாக்குவாதம் செய்ததால் கூட்ட அரங்கில் இருந்து கோபமாக கலெக்டர் வெளியேறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இருக்கை வசதியில்லை

திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு விவசாயிகள் அதிகம் பேர் வந்திருந்தனர். இதனால் அரங்கில் இருந்த இருக்கைகள் முழுவதுமாக நிரம்பின.

கலெக்டர் வினீத் கூட்ட அரங்குக்கு வந்தார். அப்போது விவசாயிகள், இருக்கை இல்லாமல் கூட்ட அரங்கின் தரையில் அமர்ந்து இருந்தனர். விவசாயிகள் எழுந்து, 'இருக்கை போதுமான அளவு இல்லை. வழக்கமாக 2-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கும். தற்போது தரைத்தளத்துக்கு மாற்றப்பட்டுள்ளதால் இந்த நிலை உள்ளது. மேலும் விவசாயிகள் அளிக்கும் மனுக்களுக்கு எந்தவித நடவடிக்கையும் இல்லை' என குற்றம் சாட்டினார்கள்.

வெளியேறிய கலெக்டர்

கலெக்டர் வினீத் விவசாயிகளை இருக்கையில் அமருமாறு கூறினார். மேலும் 'தரைத்தளத்தில் உள்ள கூட்ட அரங்கம் நவீன வசதியுடன் இருக்கைகள் அதிகமாக இடம் பெற்றுள்ளன. மாற்றுத்திறனாளி விவசாயிகள் வந்தாலும் கூட்டத்தில் எளிதில் பங்கேற்கும் வகையில் தரைத்தளத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. சாதாரண விவசாயி வந்து தனது குறையை தெரிவித்து தீர்வு காண்பதற்காகவே இந்த அரங்கில் கூட்டம் நடக்கிறது. கூடுதல் இருக்கைகள் போட ஏற்பாடு செய்யப்படும்' என்றார்.

இதை ஏற்றுக்கொள்ளாத விவசாயிகள் கலெக்டரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். மேலும் வேளாண் அதிகாரிக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில் கலெக்டர் வினீத் சட்டென்று இருக்கையில் இருந்து கோபத்துடன் எழுந்து, கூட்ட அரங்கில் இருந்து வெளியேறினார். அதிகாரிகளும் அங்கிருந்து புறப்பட்டனர். இருப்பினும் விவசாயிகள் தொடர்ந்து கூட்ட அரங்கில் அமர்ந்து தர்ணா செய்தனர்.

வராண்டாவில் அமர்ந்த கலெக்டர்

கலெக்டர் வினீத் அங்கிருந்து சென்று கலெக்டர் அலுவலகத்தின் வரவேற்பு பகுதி வராண்டாவில் இருக்கையில் அமர்ந்து விவசாயிகளிடம் மனுக்களை பெற்றார். கூட்ட அரங்கில் இருந்து பல விவசாயிகள் சென்று தங்கள் மனுக்களை கலெக்டரிடம் கொடுத்து முறையிட்டனர். மற்ற அதிகாரிகளும் கலெக்டருடன் இருந்தனர். இதன்காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அதன்பிறகு கூட்ட அரங்கில் இருந்த விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலெக்டரை சந்தித்து கூட்ட அரங்குக்கு வருமாறு அழைத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கலெக்டர் வினீத் மீண்டும் கூட்ட அரங்குக்கு சென்று விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். குறைதீர்க்கும் கூட்டம் தொடர்ந்து நடந்தது.

மேலும் செய்திகள்