"ஊருக்காக உழைக்கிறோம்; உயிர் பயத்தோடு வாழ்கிறோம்"-தூய்மை பணியாளர்கள் குடும்பத்தினர் குமுறல்

தூய்மை பணியாளர்களின் புதிய குடியிருப்பு கட்டிடம் சேதமடைந்து வருவதோடு, அதனை சுற்றி கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் ஊருக்காக உழைத்தாலும் உயிர் பயத்தோடு வாழ்வதாக தூய்மை பணியாளர்களின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.;

Update:2022-11-19 22:00 IST

தூய்மை பணியாளர்களின் புதிய குடியிருப்பு கட்டிடம் சேதமடைந்து வருவதோடு, அதனை சுற்றி கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் ஊருக்காக உழைத்தாலும் உயிர் பயத்தோடு வாழ்வதாக தூய்மை பணியாளர்களின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தூய்மை பணியாளர்கள் குடியிருப்பு

ஊர் தூய்மையாக இருந்தால் அங்கே மக்கள் ஆரோக்கியமாக வாழ்வார்கள். வீடுகளின் சுத்தத்தை அங்கே வசிப்பவர்கள் தீர்மானிக்கலாம். ஆனால், ஊரின் சுத்தத்தை தூய்மை பணியாளர்களே தீர்மானிக்கிறார்கள். நகரின் தூய்மைக்கு தூய்மை பணியாளர்களின் பங்களிப்பு மகத்தானது.

தேனி அல்லிநகரம் நகராட்சியை பொறுத்தவரை சுமார் 27 ஆயிரம் குடியிருப்புகளும், சுமார் 5 ஆயிரம் வணிக நிறுவனங்களும் உள்ளன. இங்கிருந்து தினமும் சராசரியாக 33 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இந்த பணியில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் அன்றாடம் ஈடுபட்டு வருகின்றனர். நகரை தூய்மையாக்கும் பணியில் ஈடுபட்ட போதிலும் சுகாதாரக்கேடு மற்றும் ஆபத்து நிறைந்த குடியிருப்பில் அவர்கள் வசிப்பது வேதனையானது.

நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் குடியிருப்புகள் சேதம் அடைந்து காணப்பட்டதால் அவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், இயக்குதல் மற்றும் பராமரித்தல் திட்ட இடைவெளி நிரப்பு நிதியின் கீழ் அல்லிநகரத்தில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. அதன்படி 2 பகுதியாக இந்த பணிகள் நடந்தன. முதல் பகுதியாக கட்டப்பட்ட குடியிருப்புகள் 2019-ம் ஆண்டு ஜனவரி மாதமும், 2-வது பகுதியாக கட்டப்பட்ட குடியிருப்புகள் 2020-ம் ஆண்டு நவம்பர் மாதமும் திறக்கப்பட்டன.

குறைகளின் கூடாரம்

முதல் பகுதியில் திறக்கப்பட்ட குடியிருப்பில் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 2 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். அந்த கட்டிடம் சேதமடைந்து காட்சி அளிக்கிறது. தரமற்ற கட்டுமான பணியால் கட்டிடத்தின் அடிப்பாகத்தில் அமைக்கப்பட்ட காங்கிரீட் தூண்கள் வெளியே தெரியும் அளவுக்கு சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து காணப்படுகிறது. வீடுகளுக்குள்ளும் சுவர் பெயர்ந்து விழுகிறது. மேலும், சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்பதோடு பல்வேறு குறைகளின் கூடாரமாக திகழ்கிறது. இதுதொடர்பாக தூய்மை பணியாளர் மற்றும் தூய்மை பணியாளர்களின் குடும்பத்தினர் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:-

திலகம்:- எனது கணவர் தூய்மை பணியாளராக வேலை பார்க்கிறார். ஓராண்டுக்கு முன்பு இங்கு குடியேறினோம். குடிநீருக்காக தரைமட்ட தொட்டி கட்டப்பட்டுள்ளது. ஆனால், அது சுகாதாரமற்ற நிலையில் உள்ளதால் அதில் இருந்து குடிநீர் எடுத்து பயன்படுத்த தயக்கம் உள்ளது. இதனால், மாடி வீடுகளில் வசிப்பவர்களும் குடத்தில் தண்ணீர் சுமக்கிறோம். உப்பு தண்ணீரை மாடியில் உள்ள குடிநீர் தொட்டிகளுக்கு ஏற்றுவது போல், குடிநீரையும் குழாய்கள் மூலம் வீடுகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு நேரங்களில் சமூக விரோதிகள் சிலர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீட்டு கண்ணாடிகளை கல்வீசி தாக்குகின்றனர்.

மின் விபத்து அபாயம்

பாண்டியன் (தூய்மை பணியாளர்):- நான் 20 ஆண்டுகளுக்கும் மேல் தூய்மை பணியாளராக வேலை பார்க்கிறேன். தரைமட்ட குடிநீர் தொட்டியை இங்கு வசிக்கும் தூய்மை பணியாளர்களே சுத்தம் செய்தோம். மீண்டும் அது அசுத்தமாகி வருகிறது. ஆனால், இதை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டால் அந்த பணியை செய்தது தொடர்பாக நகராட்சி ஆவணத்தில் பதிவேற்றம் செய்வது இல்லை. வெளி நபர்கள் சிலர் இங்கு வந்து மதுகுடிப்பதும், ஜன்னல் கண்ணாடிகளை உடைப்பதுமாக உள்ளனர். இதுகுறித்து அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்துள்ளோம். இந்த குடியிருப்புக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.

பார்வதி:- எனது மகன் தூய்மை பணியாளராக வேலை பார்க்கிறார். இங்கு தரைத்தளத்தில் மின்சார மீட்டர்கள் தாழ்வாக வைக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு மூடி போடப்படவில்லை. சிறுவர்கள் தொடும் உயரத்தில் உள்ளதால் விளையாடும் சிறுவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனால், குழந்தைகளை வெளியே விளையாட அனுப்பவே பயமாக உள்ளது. மீட்டர்களுக்கு பெட்டி போன்ற மூடி அமைக்க வேண்டும். குடியிருப்பு பகுதியில் பயன்பாடின்றி உள்ள கழிப்பிடத்தை அகற்றிவிட்டு சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்கா அமைக்க வேண்டும்.

உயிர் பயத்தோடு வாழ்க்கை

முனியம்மாள்:- எனது மகன் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். ஓராண்டுக்கு முன்பு நாங்கள் இந்த வீட்டுக்கு குடியேறினோம். தரமற்ற நிலையில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதால் வீட்டின் சுவர் பெயர்ந்து தினமும் விழுகிறது. கை வைத்தாலே சிமெண்டு பூச்சுகள் பொத்தென்று விழுகிறது. கழிப்பறையில் சுவர் பெயர்ந்து விழுந்து மண்ணாகி விடுகிறது. இரவில் தூங்கும் போது சுவர் பெயர்ந்து விழும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுகிறோம். எங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் ஊருக்காக உழைத்தாலும் நாங்கள் உயிர் பயத்தோடு தான் வாழ்கிறோம். எனவே இந்த கட்டிடங்களை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்