ஈஸ்டர் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
ஈஸ்டர் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.;
ஈஸ்டர் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
ஈஸ்டர் பண்டிகை
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். இந்த விழாவையொட்டி கடந்த 2-ந் தேதி குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. 7-ந் தேதி புனித வெள்ளியையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவை பாதை வழிபாடு நடத்தப்பட்டது.
இந்தநிலையில் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் உதவி பங்குத்தந்தை நல்லஜேக்கப் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை, திருமுழுக்கு புதுப்பித்தல், தண்ணீர் மந்திரிப்பு, மெழுகுவர்த்தி மந்திரிப்பு பிரார்த்தனைகள் நடந்தன. அப்போது இயேசு கிறிஸ்து கல்லறையில் இருந்து உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக அமைக்கப்பட்டது.
சிறப்பு பிராா்த்தனை
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சி.எஸ்.ஐ. பிரப் நினைவு ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை நேற்று அதிகாலையில் தொடங்கியது. தலைமை ஆயர் ஜேக்கப் லிவிங்ஸ்டன் தலைமையில் நடந்த சிறப்பு ஆராதனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர். இதேபோல் ஈரோடு ரெயில்வே காலனி திருஇருதய ஆண்டவர் ஆலயம், பி.பி.அக்ரஹாரம் லூர்து மாதா ஆலயம், பெரியசேமூர் செபஸ்தியார் ஆலயம் உள்பட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் ஈஸ்டர் பண்டிகையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
விழாவையொட்டி கிறிஸ்தவர்கள் தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு ஈஸ்டர் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.