புனித வாரம் தொடங்கியது; குருத்தோலை ஏந்தி வீதிகள் வழியாகபவனி வந்த கிறிஸ்தவர்கள்

கிறிஸ்தவர்களின் புனித வாரம் தொடங்கியதையொட்டி நேற்று கிறிஸ்தவர்கள் குருத்தோலைகள் ஏந்தி வீதிகள் வழியாக பவனி வந்தனர்.

Update: 2023-04-02 21:28 GMT

ஈரோடு

கிறிஸ்தவர்களின் புனித வாரம் தொடங்கியதையொட்டி நேற்று கிறிஸ்தவர்கள் குருத்தோலைகள் ஏந்தி வீதிகள் வழியாக பவனி வந்தனர்.

புனித வெள்ளி

புனித வெள்ளி வருகிற 7-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 22-ந் தேதி சாம்பல் புதன் முதல் கிறிஸ்தவர்கள் தவக்காலம் கடைபிடித்து வருகிறார்கள். இந்த வாரம் தவக்காலத்தின் இறுதி வாரமாகும்.

இதன் தொடக்கமாக நேற்று குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது. இதையோட்டி ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் நேற்று குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது. நடுவீதியில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தில் வைத்து தென்னை குருத்தோலைகள் மந்திரிக்கப்பட்டது.

புனித அமல அன்னை ஆலய பங்குத்தந்தையும், ஈரோடு மறைவட்ட முதன்மை குருவுமான ஜான் சேவியர் குருத்தோலைகளை தீர்த்தம் தெளித்து மந்திரித்தார். பின்னர் கிறிஸ்தவர்கள் அந்த குருத்தோலைகளை கைகளில் ஏந்தியபடி ஓசான்னா பாடல் பாடிக்கொண்டே புனித அமல அன்னை ஆலயத்தை நோக்கி பவனியாக வந்தனர். அதன்பின்னர் சிறப்பு திருப்பலி (பூஜை) நிறைவேற்றப்பட்டது. இதில் உதவி பங்குத்தந்தை நல்ல ஜேக்கப் தாஸ் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

ஈஸ்டர்

வருகிற 6-ந் தேதி (வியாழக்கிழமை) புனித வியாழன் சிறப்பு வழிபாடுகள் மாலை 6 மணிக்கு தொடங்குகின்றன. 7-ந்தேதி புனித வெள்ளி அல்லது துக்க வெள்ளியாக கடைபிடிக்கப்படுகிறது. 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை கொண்டாடும் ஈஸ்டர் பெருவிழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு 8-ந் தேதி (சனிக்கிழமை) இரவு 10.30 மணிக்கு பாஸ்கா வழிபாட்டுடன் திருப்பலி நிகழ்வுகள் தொடங்குகின்றன. நள்ளிரவு 12 மணிக்கு ஈஸ்டர் சிறப்பு திருப்பலி மறை வட்ட முதன்மை குரு ஜான் சேவியர் தலைமையில் நடக்கிறது.

இதுபோல் ஈரோடு ரெயில்வே காலனி திருஇருதய ஆண்டவர் ஆலயம், அறச்சலூர் அருகே கொமராபாளையம் புனித அந்தோணியார் ஆலயம், பெருந்துறை திருக்குடும்ப ஆலயம் என கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று குருத்தோலை ஞாயிறு பவனி வழிபாடுகள் நடந்தன.

சி.எஸ்.ஐ. ஆலயம்

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பிரப் நினைவு சி.எஸ்.ஐ. ஆலயத்தில் தலைமை ஆயர் ஜேக்கப் லிவிங்ஸ்டன் தலைமையில் நேற்று குருத்தோலை பவனி நடந்தது. பிரப் ரோடு(மீனாட்சிசுந்தரனார் சாலை) வழியாக இந்த பவனி சென்றது. தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது.

மேலும் கே.கே.நகர் சி.எஸ்.ஐ. ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்