காலரா பரவல்: காரைக்காலை ஒட்டியுள்ள மாவட்ட மக்களுக்கு விழிப்புணர்வு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

காலரா பரவல் எதிரொலியாக காரைக்காலை ஒட்டியுள்ள தமிழக மாவட்ட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-05 11:57 GMT

சென்னை,

சென்னை ராஜிவ்காந்தி சாலை கண்ணகி நகர் பகுதியில் பொதுமக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.1.49 கோடி செலவில் அப்பகுதிக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியதாவது:-

புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் 39 பேருக்கு காலரா நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை காரைக்காலை சுற்றியுள்ள தமிழக பகுதிகளான நாகப்பட்டினம், நாகூர், மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டத்தின் பகுதிகளில் தமிழக பொதுசுகாதார துறையினர் நேரில் சென்று அங்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து ஆய்வு செய்து, பொது இடங்களில் மலம் கழிப்பதனால் ஏற்படும் நோய் பரவல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும், அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் வயிற்றுப்போக்கு, வாந்தி ஆகியவற்றிற்கு தேவையான அளவு மருந்துகளை கையிருப்பு வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்களுக்கு காய்ச்சிய தண்ணீரை பருகுதல், உணவை நன்றாக வேகவைத்து உண்ணுதல் ஆகிய விழிப்புணர்வுவை பொதுமக்களுக்கு ஏற்படுத்தியுள்ளோம். நோய் பரவும் அபாயம் காரணமாக காரைக்காலுக்கு அருகே உள்ள பகுதிகளில் கண்காணிப்பினை தீவிரப்படுத்த பொதுசுகாதார துறை சார்பாக குழு ஒன்றை அனுப்பியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்