முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னெடுக்க வேண்டும் - வானதி சீனிவாசன் கோரிக்கை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-08-06 09:48 GMT

சென்னை,

இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவானது, சுதந்திர தின அமுதப் பெருவிழாவாக கடந்த ஓர் ஆண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வருகிற 13 முதல் 15-ந் தேதி வரை வீடு தோறும் தேசிய கொடியேற்றும் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிருக்கான 4 சக்கர வாகன பேரணி நடத்தப்பட்டது.

இதில், பா.ஜ.க. மகளிரணியினர் கலந்து கொண்டு 75 கார்களில் பா.ஜ.க. தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் நடிகை குஷ்பு சுந்தர் தலைமையில் தேசிய கொடி ஏந்தியபடி வாகன பேரணி மேற்கொண்டனர். பேரணியை பா.ஜ.க. அகில இந்திய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

கார் பேரணியானது சென்னை பட்டினப்பாக்கத்தில் தொடங்கி, மத்திய கைலாஷ், சோழிங்கநல்லூர் வழியாக கானத்தூர் வரை நடைபெற்றது. பேரணி நிறைவில், கானத்தூர் அருகே உள்ள கிராம மக்களுக்கு தேசிய கொடிகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் போது வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது,

தமிழகத்தில் தி.மு.க.வினருக்கு தேசிய கொடி மீதோ, தேசிய ஒற்றுமை மீதோ முழுமையான நம்பிக்கை இல்லாத தன்மையை நாங்கள் பல்வேறு நேரங்களில் சுட்டிக்காட்டி இருக்கிறோம். தற்போதும் வீடு தோறும் தேசிய கொடியேற்றுவதற்கான தீவிரமான முன்னெடுப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பார்க்க முடியவில்லை. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின கொண்டாட்டங்களில் முன்னணியில் நின்று மக்களுக்கு உத்வேகத்தை கொடுக்க வேண்டும்.

இதனை தமிழகத்தின் மக்களாக நாங்கள் அவரிடம் எதிர்பார்க்கிறோம். 75-வது சுதந்திர தின விழாவையொட்டி, தேசத் தியாகிகளை போற்றுகின்ற வகையில் அவர் சுதந்திரதின கொண்டாட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்