தூத்துக்குடி-திருச்செந்தூர்-கன்னியாகுமரி 4 வழிச்சாலை குறித்து தலைமை பொறியாளர் ஆய்வு

தூத்துக்குடி-திருச்செந்தூர்-கன்னியாகுமரி 4 வழிச்சாலை குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு மேற்கொண்டார்

Update: 2022-07-20 16:37 GMT

தூத்துக்குடி-திருச்செந்தூர்-கன்னியாகுமரி 4 வழிச்சாலை குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு மேற்கொண்டார்.

தேசிய நெடுஞ்சாலை

மத்திய அரசு பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம் முதல் கன்னியாகுமரி வரை சுமார் 456 கிலோ மீட்டர் தூர 4 வழிச்சாலை அமைக்க முடிவு செய்து உள்ளது. இதற்கான கள ஆய்வுகள் கடந்த 2017-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. பல்வேறு கட்ட ஆய்வுகள் முடிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டு உள்ளது. அந்த திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

அதன்படி நாகப்பட்டினம் முதல் கன்னியாகுமரி வரையிலான பாதுகாப்பு வழித்தடத்துக்கு தேசிய நெடுஞ்சாலை-32 என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த சாலை பாதுகாப்பு முக்கியத்துவம் மட்டுமின்றி, பொருளாதார வளர்ச்சிக்கும், துறைமுகத்தை இணைத்து சரக்கு போக்குவரத்தை அதிகரிக்கும் வகையிலும் இந்த சாலை திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த சாலை விமானங்கள் இறங்குவதற்கு வசதியாகவும் அமைக்கப்படுகிறது.

இந்த நிலையில் நாகப்பட்டினம் முதல் தூத்துக்குடி ஜெகவீரபாண்டியபுரம் வரை ஏற்கனவே உள்ள கிழக்கு கடற்கரை சாலை தேசிய நெடுஞ்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில் 37 பெரிய பாலங்கள், 68 சிறிய பாலங்கள், 668 சிறிய ஓடை பாலங்கள் அமைக்கப்பட உள்ளது. 4 இடங்களில் ரெயில்வே தண்டவாளங்களை கடந்து வருகிறது.

ஆய்வு

இதனை தொடர்ந்து தூத்துக்குடியில் திருச்செந்தூர், கன்னியாகுமரி வரை மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இதனால் தேசிய நெடுஞ்சாலைத்துறையால் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடங்களை மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அதன்படி தூத்துக்குடி-திருச்செந்தூர்-கன்னியாகுமரி 4 வழிச்சாலை பணிக்கான நேர்கோட்டு பாதை குறித்து ஆய்வு செய்வதற்காக சென்னையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் பாலமுருகன் நேற்று தூத்துக்குடிக்கு வந்தார். அவர் வளைவுகள் இன்றி சாலைகள் அமைப்பது தொடர்பாக பல்வேறு இடங்களை ஆய்வு செய்தார்.

அதிகாரிகள்

ஆய்வின் போது, நெல்லை தேசிய நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் பழனியப்பன், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் சுப்பிரமணியன் மற்றும் நெல்லை தேசிய நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர் ஆனையப்பன், தூத்துக்குடி கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளர் ஆறுமுக நயினார், உதவி கோட்ட பொறியாளர்கள் மோகன், ஆனந்த், திருவருள்செல்வன், திருவேங்கட ராமலிங்கம், உதவிப் பொறியாளர்கள் அருண்பிரகாஷ், ஜெயஜோதி உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்