சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தை 2 கிராம மக்கள் முற்றுகை

சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தை 2 கிராம மக்கள் முற்றுகையிட்டனா்.

Update: 2023-09-21 18:45 GMT

சிதம்பரம்:

சிதம்பரம் அருகே உள்ள நாஞ்சலூர் மற்றும் சி.வக்காரமாரி ஆகிய இரு கிராமங்களை சேர்ந்த மக்கள் நேற்று காலை சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். தொடர்ந்து அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டனர். பின்னர் கிராம மக்கள் சப்-கலெக்டர் சுவேதா சுமனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாஞ்சலூர் மற்றும் சி.வக்காரமாரி கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தை தவிர்த்து மற்ற அனைத்து சமூகத்திற்கும் பொதுவான மயானம் உள்ளது. இந்த மயானத்திற்கு பாதை வசதி இல்லாததால், இறந்தவர்களின் உடல் வரப்பில் எடுத்து செல்லப்பட்டு வந்ததால் பொதுமக்கள் சிரமமடைந்து வந்தனர். இதற்கிடையே தற்போது அமைக்கப்பட்டு வரும் சிதம்பரம் -திருச்சி புறவழிச்சாலையானது மயானத்தை ஒட்டி வருவதால், சாலை பணியாளர்களே மயானத்திற்கு பாதை வசதி செய்து கொடுத்துள்ளார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அப்பகுதியை சேர்ந்த சிலர், மயான பாதையை வெட்டி சேதப்படுத்தி உள்ளனர். இதனால் இறந்தவர்களின் உடலை எடுத்துச்செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

எனவே இதுகுறித்து சப்-கலெக்டர் நேரில் வந்து பார்வையிட்டு மயானப் பாதையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் புதிதாக மயான பாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட சப்-கலெக்டர் சுவேதா சுமன் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்