சென்னை: கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து - 3 பேர் உயிரிழப்பு
கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.;
சென்னை,
சென்னை ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள தனியார் கேளிக்கை விடுதியில் முதல் தளத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்து ஏற்பட்டபோது, ஏராளமானோர் கேளிக்கை விடுதியில் இருந்தனர். இந்த நிலையில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.
இதில் கட்டிட இடிபாடிகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மூவரும் கேளிக்கை விடுதியில் பணியாற்றி வந்தவர்கள் என்றும் அவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றும் மற்ற இருவரும் மணிப்பூரைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
கேளிக்கை விடுதிக்கு அருகே மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விபத்து நேரிட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக அபிராமபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்து பகுதியில் மீட்பு பணிகளை துரிதப்படுத்தி உள்ளதாக கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா தெரிவித்துள்ளார்