தே.மு.தி.க.வினர் 20 பேர் மீது வழக்குப்பதிவு
தேர்தல் ஆணையத்தில் பெற்ற அனுமதியை மீறி செயல்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;
சென்னை,
2024-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட்டன. அதில், மறைந்த நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 9-ந்தேதி பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் விஜயகாந்துக்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதினை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், ஜனாதிபதியிடம் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் நேற்று சென்னை திரும்பினார். அவரை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் தே.மு.தி.க.வினர் குவிந்தனர். இதையடுத்து காவல்துறையினர் கூட்ட நெரிசலை தடுக்க முயன்றபோது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், வாகனப் பேரணியாக செல்ல முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் தே.மு.தி.க.வினர், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், தேமுகதிகவினர் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தில் பெற்ற அனுமதியை மீறி செயல்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து, பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது, அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுப்பது உள்பட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.