பிளஸ்-2 மாணவியை திருமணம் செய்த தொழிலாளி மீது வழக்கு
தேனி அருகே பிளஸ்-2 மாணவியை திருமணம் செய்த தொழிலாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;
தேனி பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்த முருகேசன் மகன் ராஜ்குமார் (வயது 22). இவர், ஒரு ஜவுளிக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் பிளஸ்-2 படிக்கும் 16 வயது மாணவியை காதலித்தார். ஆசை வார்த்தைகள் கூறி அந்த மாணவியை திருமணம் செய்தார். பின்னர் தனது உறவினர் வீட்டுக்கு சிறுமியை அழைத்துச் சென்றார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிறுமியின் பெற்றோர் நேரில் சென்று சிறுமியை அழைத்து வந்தனர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட குழந்தைகள் நலக்குழு அலுவலர்கள் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க தேனி அனைத்து மகளிர் போலீசாருக்கு கடிதம் அனுப்பினர். அதன்பேரில் சிறுமியை அழைத்து போலீசார் விசாரணை நடத்தி அவரிடம் வாக்குமூலம் பெற்றனர். பின்னர் சிறுமியை திருமணம் செய்த ராஜ்குமார் மீது குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.