பிரம்ம சிரக்கண்டீஸ்வரர் கோவில் தேரோட்டம்

திருவையாறு அருகே கண்டியூர் பிரம்ம சிரக்கண்டீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.;

Update:2023-06-02 00:30 IST

திருவையாறு அருகே கண்டியூர் பிரம்ம சிரக்கண்டீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

பிரம்ம சிரக்கண்டீஸ்வரர் கோவில்

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே கண்டியூரில் பிரம்ம சிரக் கண்டீஸ்வரர் கோவில் உள்ளது. பிரம்மனின் 5 தலைகளுள் ஒன்றை சிவபெருமான் தன் சூலத்தால் கண்டனம் செய்த (கொய்த) காரணத்தால் இந்த ஊருக்கு கண்டியூர் எனப்பெயர் வந்ததாக தல புராணம் கூறுகிறது.

தலை கொய்யப்பட்ட பின்னர் பிரம்மனின் வேண்டுதலின்படி அவருடைய 5 முகங்களின் அழகினை 4 முகங்களில் சிவபெருமான் அருளினார். இந்த தலம் பிரம்மகத்தி தோஷம் நீக்கும் தலமாகவும், சிவபெருமானின் வீர திருவிளையாடல்கள் நடந்த அட்டவீரட்டத் தலங்களுள் இக்கோவிலும் ஒன்று.

பிரம்மோற்சவம்

பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோவிலில் 15 நாள் பிரம்மோற்சவ விழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்தில் சாமி புறப்பாடும் நடைபெற்று வருகிறது.

கடந்த 30-ந் தேதி மங்களாம்பிகா சமேத பிரம்ம சிரக்கண்டீஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. 31-ந் தேதி வெண்ணெய்த்தாழி உற்சவம் நடந்தது.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்றான தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் நான்கு வீதிகளில் உலா வந்த பின்னர் நிலையை அடைந்தது. இரவு பிச்சாடன மூர்த்தி புறப்பாடு நடைபெற்றது.

விழாவில் நாளை (சனிக்கிழமை) இரவு அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி பல்லக்கு புறப்பாடு நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பிருந்தாதேவி, ஆய்வாளர் கீதாபாய், எழுத்தர்கள் பஞ்சநாதன், செந்தில்குமார் மற்றும் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்