தமிழகம் முழுவதும் 2-ந் தேதி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி; தமிழக ஆயர்பேரவை தலைவர் பேட்டி

தமிழகம் முழுவதும் 2-ந் தேதி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தப்படும் என்று தமிழக ஆயர்பேரவை தலைவர் கூறினார்.

Update: 2023-06-29 20:00 GMT

மணிப்பூர் கலவரம்

தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ அமைப்பு நிர்வாகிகள் கூட்டம் திருச்சி மரியன்னை பேராலயத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பிறகு தமிழக ஆயர் பேரவை தலைவர் பேராயர் ஜார்ஜ்அந்தோணிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மணிப்பூரில் நடக்கும் கலவரம் 2 சமூகத்துக்கு இடையே நடக்கும் மோதல் என்றே வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தெரியும். ஆனால் உண்மையில் இந்த கலவரத்தில் குகி இன கிறிஸ்தவ மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மெய்தி இன மக்கள் வாழும் பகுதிகளிலும் கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்பட்டுள்ளன.

குறிவைத்து தாக்குகிறது

பல ஆண்டுகளாக கிறிஸ்தவர்களுக்கு எதிராக செயல்பட்டு வந்த சில குழுக்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கிறிஸ்தவ தேவாலயங்களை குறித்து வைத்து தாக்குகிறது. இந்த கலவரத்தில் குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பில் இருந்து அவர்கள் விடுபட பல ஆண்டுகள் ஆகும். அதேபோல், இந்து கோவில்களும் தாக்கப்பட்டுள்ளன.

நாங்கள் இந்த விவகாரத்தில் மனிதநேயத்தோடு நடந்து கொள்ளவே விரும்புகிறோம். மதங்களை கடந்தது தான் மனிதநேயம். இந்த தருணத்தில் அரசு மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும். மீண்டும் பழைய மணிப்பூர் மாநிலமாக மாற பொருளாதார ரீதியாக எங்கள் அமைப்பு சார்பில் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்.

மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி

இருப்பினும் நடந்த கலவரங்களை கண்டித்தும், இந்த பிரச்சினையில் அரசு தலையிட்டு உடனடியாக தீர்வு காண வலியுறுத்தியும் வருகிற 2-ந் தேதி தமிழகம் முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தியும், அமைதியாகவும் பேரணிகள் நடத்தப்படும். அதே நாளில் சமூக நல்லிணக்க உறுதிமொழியும் எடுக்கப்படும்

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது நிர்வாகிகள் மதுரை பேராயர் அந்தோணிபாப்புசாமி, மறை மாவட்ட ஆயர்கள் அந்தோணிசாமி (பாளையங்கோட்டை), ஆரோக்கியராஜ் (திருச்சி), தமிழக துறவியர் பேரவை தலைவர் வேளாங்கண்ணிரவி, அடைக்கல அன்னை சபை தலைவர் மரியபியோ, மான்போர்ட் சகோதர்கள் சபை மாநில தலைவர் இருதயம், திருச்சி மறை மாவட்ட முதன்மை குரு அந்துவான் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்