தராசுகளில் போலி முத்திரையிடும் வணிகர்களின் உரிமம் ரத்து- சட்டமுறை எடையளவு கூடுதல் கமிஷனர் எச்சரிக்கை

தராசுகளில் போலி முத்திரையிடும் வணிகர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என சட்டமுறை எடையளவு கூடுதல் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-04-13 21:36 GMT


தராசுகளில் போலி முத்திரையிடும் வணிகர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என சட்டமுறை எடையளவு கூடுதல் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தராசுகள்

தமிழ்நாடு சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு கூடுதல் கமிஷனர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் தராசுகளில் தொழிலாளர் துறை கட்டுப்பாட்டில் உள்ள முத்திரை ஆய்வாளர் மூலம் எடையளவு, நீட்டல், அளத்தல் அளவைகள் ஆகியவற்றுக்கு முத்திரை பெற வேண்டும். 2 வருடங்களுக்கு ஒரு முறை எடையளவு சரிபார்த்து அவற்றை புதுப்பிக்க வேண்டும். இதற்கான நடைமுறைகள் தற்போது ஆன்லைன் மூலம் மாற்றப்பட்டு எளிமையாக்கப்பட்டு உள்ளன.

முத்திரை சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த வணிகர்கள் தங்களது வசதிக்காக சிறப்பு முத்திரை முகாம் நடத்த வலியுறுத்தினால், அந்த பகுதியில் சட்டமுறை எடையளவு துறையினர் நேரில் வந்து தராசுகள், படிக்கற்கள் ஆகியவற்றுக்கு முத்திரை வைத்து தருகின்றனர்.

உரிமம் ரத்து

இதற்கிடையே தராசுகள், படிக்கற்கள், எலக்ட்ரானிக் தராசுகள் ஆகியவற்றை விற்பனை செய்யும் நிறுவனங்கள் உரிமம் பெற வேண்டும். அவ்வாறு உரிமம் பெற்ற சில நிறுவனங்கள், வணிகர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. மதுரை கீழமாசி வீதியில் உள்ள பிரபல தராசு விற்பனை நிறுவனம் தனது சரக்கு குடோனில் அரசு முத்திரையை போலியாக தயாரித்து, தங்களிடம் தராசு வாங்குபவர்களுக்கு முத்திரையிடும் பணியில் ஈடுபடுவது கண்டறியப்பட்டு, கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மதுரை கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 6 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

எனவே, எடையளவு சட்டம் 2009 மற்றும் தமிழ்நாடு சட்டமுறை எடையளவு அமலாக்க விதிகள் 2011-ன் படி, மேற்கண்ட குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் வணிகர்கள், வணிக நிறுவனங்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டு கோர்ட்டு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுபோன்ற சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையில் ஈடுபடும் வணிகர்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்