5 மாதத்துக்குள் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும்- ஈரோடு பிரசாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை இன்னும் 5 மாதங்களில் வழங்கப்படும் என்று ஈரோடு பிரசாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

Update: 2023-02-20 21:19 GMT

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை இன்னும் 5 மாதங்களில் வழங்கப்படும் என்று ஈரோடு பிரசாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

உண்மையில்லாமல் இருக்கிறார்

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவு திரட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை ஈரோடு வந்தார். பின்னர் அவர் கணபதிநகர், நேரு வீதி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடையே பேசும்போது கூறியதாவது:-

பெரியாரின் பேரனுக்கு, கருணாநிதியின் பேரன் நான் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். கடந்த தேர்தலில் திருமகன் ஈவெராவை 9 ஆயிரம் வாக்குகளில் வெற்றி பெறச்செய்த நீங்கள், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும். செய்வீர்களா?. அதை விட அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி.

நம்முடைய தலைவர் இப்போது முதல்-அமைச்சராக இருக்கிறார் என்றால் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவராக உள்ளார். ஆனால், நீங்கள் எடப்பாடி பழனிசாமி எப்படி முதல்-அமைச்சர் ஆனார்.. (கையில் ஒரு போட்டோவை எடுத்து உயர்த்திக்காட்டுகிறார்) இவரை தெரிகிறதா?. அந்த போட்டோவில் சசிகலா காலில் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கிடக்கும் படம் இருந்தது.) இவர்தான் நம் தலைவரை பார்த்து, நீ ஆம்பளையா, மீச வச்ச ஆம்பளயா என்று கேட்கிறார்.

இவர் இப்படித்தான் தான் முதல்-அமைச்சராக இருந்தார். அதை மறந்து விட்டார். அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதுதான் அடிமையாக இருந்தார் என்றால் இப்போதும் அடிமையாகத்தான் இருக்கிறார். பிரதமர் மோடி என்ன சொன்னாலும் கேட்டுக்கொண்டு, யாருக்கும் உண்மையில்லாமல் இருக்கிறார்.

அண்ணாவின் பெயரை கட்சியில் வைத்துக்கொண்டு ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுனரும் தேவையில்லை என்றார். ஆனால், அதே ஆளுனருக்கும் அடிமையாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. சட்டமன்றத்தில் 19 மசோதாக்கள் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி இருக்கிறோம். ஆளுனர் கையெழுத்து போடாமல் காக்க வைத்துக்கொண்டு இருக்கிறார்.

வீதியில் சண்டை

மோடியிடம் கட்சி பிரச்சினைக்காக பேச எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் போட்டிப்போட்டு ஓடிச்செல்வார்கள். எப்போதாவது மக்கள் பிரச்சினைக்காக சென்று இருக்கிறார்களா?. யோசித்து பாருங்கள். ஆட்சியில் இருந்தபோது 2 பேரும் ஒற்றுமையாக இருந்தார்கள். நீ முதல்-அமைச்சர், நான் துணை முதல் அமைச்சர், நீ ஒருங்கிணைப்பாளர், நான் துணை ஒருங்கிணைப்பாளர். இப்படித்தான் ஆட்சியை நடத்தினார்கள். ஆட்சி போன அடுத்த நிமிடம் 2 பேரும் வீதியில் நின்று சண்டைபோட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

அண்ணாவின் பெயரில் கட்சி வைத்திருக்கிறீர்கள். அண்ணாவுக்கும் நீங்கள் உண்மையாக இல்லை. மறைந்த தலைவர் எம்.ஜி.ஆர். அவர்தான் கட்சியின் சட்ட திட்டங்களை வகுத்தவர். கட்சியினரால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்தான் கட்சியின் தலைமை பொறுப்பில் இருக்க வேண்டும் என்று அவர் சட்டம் வகுத்தார். அப்படியா நீங்கள் பதவிக்கு வந்திருக்கிறீர்கள். எனவே எம்.ஜி.ஆருக்கும் உண்மையாக இல்லை. ஜெயலலிதாவுக்கும் உண்மையாக இல்லை. கூவத்தூர் கலாட்டாக்கள் நினைவில் உள்ளதா?. உங்களை ஆட்சிக்கு கொண்டு வந்த சசிகலாவுக்கும் உண்மையாக இல்லை. கவிழ்த்து விட்டுவிட்டீர்கள். ஓ.பன்னீர்செல்வம் உங்களுடனேயே இருந்தார். அவரையும் கவிழ்த்து விட்டீர்கள். மக்களுக்கும் உண்மையாக இல்லை. நீங்கள் யாருக்கு உண்மையாக இருக்கிறீர்கள் தெரியுமா?. புதுடெல்லியில் உங்கள் எஜமானர்கள் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் உண்மையாக இருக்கிறீர்கள்.

மருத்துவமனை

தி.மு.க. ஆட்சி அமைந்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகி இருக்கிறது. நம்முடைய தலைவர் சென்னையில் கிண்டியில் கிங்ஸ் மருத்துவமனை ரூ.240 கோடியில் 9 மாடியுடன் சுமார் 1000 டாக்டர்கள் கொண்ட ஆஸ்பத்திரி கட்டப்படும் என்று அறிவித்தார். பணிகள் முடிந்து விட்டது. விரைவில் முதல்-அமைச்சர் அந்த ஆஸ்பத்திரியை மக்களுக்காக திறந்து வைக்க உள்ளார். மதுரையில் கலைஞர் நூலகம் ரூ.116 கோடியில் கட்டப்படும் என்று அறிவித்து கட்டும் பணிகள் முடிந்து விட்டன. டிசம்பர் மாதம் நிறைவடையும் என்று திட்டமிடப்பட்டது. ஆனால் 6 மாதத்துக்கு முன்பே முடிந்து விடும். ஜூன் 3-ந் தேதி முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார். (கட்டிட போட்டோக்களை எடுத்து மக்களிடம் காட்டினார்).

கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி மதுரைக்கு வந்தபோது ரூ.3 ஆயிரம் கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று அறிவித்தார். அந்த எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு இதுவரை ரூ.300 கோடி செலவு செய்ததாக அறிவித்து இருக்கிறார்கள். ரூ.300 கோடியில் கட்டப்பட்ட எய்ம்ஸ் ஆஸ்பத்திரி இதுதான் (பொட்டல் காடாக கிடக்கும் இடத்தின் படத்தை காட்டினார்). அங்கே இருந்தது ஒரே ஒரு செங்கல்தான் (செங்கல் எடுத்து மக்களிடம் காட்டினார்). அதையும் நான் எடுத்து வந்து விட்டேன். இந்த சூழலில் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி 90 சதவீதம் பணிகள் முடிந்து விட்டது என்று அறிவித்து இருக்கிறார். இதுதான் பா.ஜனதாவும், அ.தி.மு.க.வும் மதுரைக்கு கட்டிக்கொடுத்த எய்ம்ஸ் மருத்துவமனை.

ரூ.1000 கோடி திட்டங்கள்

ஈரோடு மாவட்டத்துக்கு மட்டும் கனிமார்க்கெட், சத்தி ரோடு பஸ் நிலையம், சாலை மேம்பாட்டு பணிகள், வணிகவளாகம் என்று பல்வேறு பணிகள் நடந்து உள்ளன. இந்த இடைத்தேர்தல் வெற்றிக்கு பின்னர் ஈரோட்டுக்காக ரூ.1000 கோடியில் பல்வேறு திட்டங்களை தலைவர் அறிவித்து செயல்படுத்த உள்ளார்.

பெண்கள் மனதில் உள்ள கோரிக்கை என்ன என்று எனக்கு தெரியும். குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகை ரூ.1000 இன்னும் அதிக பட்சம் 5 மாதங்களுக்குள் வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் எடுத்து உள்ளார்.

எனவே அன்போடு, பாசத்தோடு, உரிமையோடு, உங்கள் வீட்டு பிள்ளையாக, தலைவரின் மகனாக, கருணாநிதியின் பேரனாக உங்களிடம் கேட்கிறேன். கை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்