முதல்-அமைச்சரின் பணிகள் வாக்காளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

முதல்-அமைச்சரின் பணிகள் வாக்காளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

Update: 2023-02-04 21:55 GMT


ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வீடு வீடாக சென்று திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கி கூறி கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை எடுத்துக்கூறி திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்து வருகின்றோம். இந்த ஆட்சி குறித்தான மதிப்பீடுகளில் மக்கள் மிகவும் திருப்திகரமாக இருக்கிறார்கள். இந்த ஆட்சியின் திட்டங்களும், முதல் -அமைச்சரின் பணிகளும் வாக்காளர்களுக்கு மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஈரோடு மாநகராட்சியில் கடந்த 1½ ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் ஏறத்தாழ ரூ.400 கோடிநிதி ஒதுக்கீடு செய்து பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஈரோடு மாநகராட்சியில் எந்த பகுதிக்கு சென்றாலும் மழை நீர் வடிகால் பணி, பாதாள சாக்கடை விரிவாக்க பணி என ஏராளமான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. அதனால் சாலைகள் கூட சில இடங்களில் சேதம் அடைந்திருக்கின்றன.

பாதாள சாக்கடை பணியும், மழைநீர் வடிகால் பணியும் முடிவுற்றால் மீண்டும் அந்த சாலைகள் புதுப்பித்து தரப்படும். அந்தப் பணிகளுக்கும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் அந்த பணிகளும் செய்யப்படும். ஈரோடு மாநகராட்சி ஒரு மிகச்சிறந்த மாநகராட்சியாக வருவதற்கு அனைத்து கட்டமைப்புகளையும் மேம்படுத்த முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.400 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொண்டு இருக்கின்றார்.

அ.தி.மு.க. ஆட்சியில் முதியோர் உதவித்தொகை வழங்குவதில் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தனர். குறிப்பாக ஆதரவற்ற முதியோர்களாக இருந்தாலும் ஆண் வாரிசு இருக்கக்கூடாது என்ற ஒரு விதியை கொண்டு வந்திருக்கிறார்கள். அதனால் 7 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதியோர் உதவித்தொகை வாங்கி கொண்டிருந்தவர்களுக்கும், நிறுத்தப்பட்டவர்களுக்கும் அனைத்து வருவாய் அலுவலகங்களிலும் கணக்கெடுக்கப்பட்டு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்