தஞ்சை மாநகரில் பஸ்களில் காற்று ஒலிப்பான்கள் அகற்றம்
தஞ்சை மாநகரில் பஸ்களில் காற்று ஒலிப்பான்கள் அகற்றம்
தஞ்சை மாநகரில் அதிக ஒலி எழுப்பும் வகையில் பஸ்களில் பொருத்தப்பட்டு இருந்த காற்று ஒலிப்பான்களை போலீசார் அகற்றி எச்சரித்து அனுப்பினர். இன்று முதல் காற்று ஒலிப்பான்கள் கண்டறியப்பட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
காற்று ஒலிப்பான்கள்
தஞ்சை மாநகரில் பஸ்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான்கள் பொருத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி பஸ்கள் காற்று ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தும் போது அதிக ஒலி எழுப்பப்படுவதால் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாக நேரிடுகிறது.
இதையடுத்து தஞ்சை மணிமண்டபம் அருகே மாநகர போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், ரமேஷ்குமார் மற்றும் போலீசார் காற்று ஒலிப்பான்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
50 பஸ்களில் அகற்றம்
அதன்படி அரசு மற்றும் தனியார் பஸ்களில் இருந்த காற்று ஒலிப்பான்களை அகற்றி, அவற்றை பஸ் டயருக்கு அடியில் வைத்து அழித்தனர். இதே போன்று 50-க்கும் மேற்பட்ட பஸ்களில் இருந்த காற்று ஒலிப்பான்களை போலீசார் அகற்றினர்.
பின்னர் அந்தந்த பஸ் டிரைவர்களிடம் காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தக்கூடாது என எச்சரித்து அனுப்பினர். இன்று (வியாழக்கிழமை) முதல் பஸ்களில் தொடர்ந்து சோதனை நடத்தப்படும். அப்போது காற்று ஒலிப்பான்கள் பொருத்தியிருப்பது கண்டறியப்பட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.