தமிழக அரசுடன், தொழில் நிறுவனங்களும் கைகோர்க்க வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அழைப்பு
தமிழகத்தில் காசநோய் ஒழிப்பு திட்டத்தில் அரசுடன் தொழில் நிறுவனங்களும் கைகோர்க்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் காசநோய் ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்தும் வகையில் மாநில காசநோய் அமைப்பு மற்றும் சி.ஐ.ஐ. ஹெல்த் கேர் கூட்டமைப்பும் இணைந்து காசநோய் ஒழிக்கும் கூட்டு முயற்சிக்கான நிகழ்ச்சி, சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காசநோய் ஒழிப்பு திட்டத்தின் மூன்று முக்கிய அம்சங்கள் நன்கு வரையறுக்கப்பட்ட காசநோய் எதிர்ப்புத் திட்டம் மூலம் தரமான காசநோய் பராமரிப்பு மற்றும் சிகிச்சையை அரசுக்கு அறிவிக்கவும், தனியார் மருத்துவ மற்றும் சுகாதார நிறுவனங்களுக்கு காசநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
காசநோயாளிகளுக்கு தரமான ஊட்டச்சத்து, ஆரோக்கியம், பராமரிப்பு, கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் மூலம் ஆதரவளிக்கப்படும். காசநோய் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கும், தொழில் நிறுவனங்களிடையே, காச நோய் ஒழிப்பு திட்டத்தில் தீவிர ஈடுபாட்டை உருவாக்குவதற்கும், சி.ஐ.ஐ. உறுப்பினர் தொழில் நிறுவனங்களுடன் காசநோய் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்க செய்யப்படும். இவை காசநோய் ஒழிப்பு திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.
இந்த முயற்சியில் சேர திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரி, திருச்சி காவேரி ஆஸ்பத்திரி, கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சேலம் சரவணா மருத்துவமனை, மதுரை தேவதாஸ் மருத்துவமனை, எல்.அண்ட்.ஆம்ப், டி கன்ஸ்ட்ரக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
தமிழகம் முழுவதும் உள்ள காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து ஆதரவை வழங்க தொழில்துறை உறுப்பினர்களை அழைப்பதே இந்த முயற்சியாகும் என கூறினார்.