மனைவியின் காதலனை வெட்டிக்கொன்ற கொடூரம்: வாலிபர் கொலையில் திடுக்கிடும் தகவல்

புழல் அருகே மோட்டார் சைக்கிளை வழிமறித்து வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் வெளியானது. கைக்குழந்தையுடன் மனைவியை அபகரித்து சென்று குடும்பம் நடத்தியதால் ஆத்திரத்தில் காதலனை கணவர் வெட்டிக்கொன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

Update: 2023-02-01 07:12 GMT

சென்னை அடுத்த புழல் லட்சுமிபுரம் குமரன் தெருவை சேர்ந்தவர் சுதாசந்தர் (வயது 22). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் ஒரு பெண்ணுடன் புழல் லட்சுமிபுரம் கல்பாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, 5 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்து கொளத்தூர் போலீஸ் துணை கமிஷனர் ராஜாராம், போலீஸ் உதவி கமிஷனர் ஆதிமூலம், இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து கொலையான வாலிபருடன் வந்த பெண்ணை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில், பரபரப்பு தகவல் கிடைத்தது. அதில் அந்த பெண்ணின் பெயர் ராகவி (19) என்பதும், 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அடுத்த ஆவடி மோரை பகுதியில் வசித்து வந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த சுதாசந்தருடன் காதல் வயப்பட்டு இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்ததும் தெரியவந்தது.

இதையறிந்த ராகவியின் பெற்றோர்கள் உடனடியாக அவரது உறவுக்காரரான வசந்த் என்பவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு 2 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்ற ராகவி முன்னாள் காதலன் சுதாசந்தருடன் வாழ முடிவு செய்தார்.

அதன்படி 2 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு கைக்குழந்தையுடன் வெளியேறிய ராகவி, சுதா சந்தருடன் புழல் லட்சுமிபுரத்தில் வீடு வாடகைக்கு எடுத்து குடித்தனம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. தனது குழந்தையுடன் மனைவியை அபகரித்து வாழ்ந்து வந்ததால் ஆத்திரமடைந்த ராகவியின் கணவர் வசந்த் மற்றும் உறவினர்கள் அவர்களை தீர்த்துக்கட்ட முடிவு செய்து நேற்று முன்தினம் சுதாசந்தரை கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை குற்றவாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் மணி ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தனிப்படை போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும் கொலையாளிகள் வந்த ஆட்டோ டிரைவர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்