தமிழக மக்களை திரட்டி பாமக போராட்டம் நடத்தும்- அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

இளைய தலை முறையினரிடம் மதுப்பழக்கத்தை அதிகரிக்க தமிழக அரசு முயன்றால் அதை பாமக அனுமதிக்காது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-11-25 14:00 GMT

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் மதுவகைகள் கண்ணாடி புட்டிகளில் அடைத்து விற்கப்படுவதற்கு மாற்றாக காகிதக் குடுவைகளில் அடைத்து விற்கப்படவுள்ளதாகவும், அது குறித்த அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என்றும் மது விலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்திருக்கிறார். மது அருந்துபவர்கள் காலியான மதுப்புட்டிகளை கண்ட இடங்களில் வீசுவதால் சுற்றுச்சூழலுக்கும், விலங்குகளுக்கும் ஏற்படும் பாதிப்புகளையும், ஆபத்துகளையும் ஒப்பிடும் போது காகிதக் குடுவைகளில் மது வணிகம் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறைவு. ஆனாலும், தமிழ்நாட்டில் மது விலக்கை நடைமுறைப்படுத்தும் கோணத்தில் பார்க்கும் போது, இந்த மாற்றம் தமிழ்நாட்டில் மதுக்கடைகள் மூடப்படுவதை தாமதப்படுத்தும். அந்த வகையில் இதை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்க்கிறது.இவற்றையெல்லாம் விட பாட்டாளி மக்கள் கட்சிக்கு உள்ள மிகப்பெரிய அச்சம் என்னவென்றால், காகிதக் குடுவைகளில் மது விற்பனை என்ற பெயரில், 90 மி.லி. மதுப்புட்டிகள் சந்தையில் அறிமுகம் செய்யப்படுமோ? என்பது தான்.90 மி.லி. மதுப்புட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டால், அது தமிழ் நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் பெருந்து ரோகமாக இருக்கும்.90 மி.லி. காகிதக் குடுவை மது ரூ.70 என்ற அளவில் விற்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது.

ரூ.70 என்பது மிகவும் எளிதாக திரட்டப்படக் கூடியது.அதுமட்டுமின்றி காகிதக் குடுவைகளில் விற்கப்படும் மது, மில்க் ஷேக், பழச்சாறுகள் போன்றவற்றைப் போலவே தோற்றமளிக்கக்கூடியது என்பதால் சிறுவர்களோ, மாணவர்களோ காகிதக் குடுவைகளில் மது அருந்தினால் கூட அவற்றை மற்றவர்களால் எளிதாக கண்டுபிடிக்க முடியாது என்பதால் 90 மிலி மது வகை அறிமுகம் செய்யப்படுவது மிகப்பெரிய அளவில் சமூக சீரழிவை ஏற்படுத்தி விடும். தமிழ்நாட்டில் படிப்படியாக முழு மதுவிலக்கு என்பது தான் மக்களின் விருப்பம். அரசின் திட்டமும் அதுவாகத் தான் இருக்க வேண்டும். அதற்கு எதிரான வகையில், 90 மிலி காகிதக் குடுவையில் மதுவை அறிமுகம் செய்து, இளைய தலை முறையினரிடம் மதுப்பழக்கத்தை அதிகரிக்க தமிழக அரசு முயன்றால் அதை பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது. அதைக் கண்டித்து ஒட்டுமொத்த தமிழக மக்களையும் திரட்டி, வரலாறு காணாத அளவிலான போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்