பள்ளிகளில் காலை உணவு திட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, கே.எஸ். அழகிரி பாராட்டு

மிகுந்த நிதி நெருக்கடியான சூழலிலும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிற தமிழக முதல்-அமைச்சரை பாராட்டுகிறேன் என கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-15 08:30 GMT

சென்னை,

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை பின்தங்கியோர் பட்டியலில் இருந்து தமிழகத்தின் பழங்குடியின பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தார். இதற்கிடையில் தமிழகத்தின் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நரிக்குறவர், குருவிக்கார சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை வரவேற்கிறேன்.

எந்த சொத்தும் இல்லாதவர்களுக்கு கல்வி என்ற சொத்தை அனைவருக்கும் இலவசமாக வழங்கி மாணவர்களின் வருகையை அதிகரிப்பதற்காக கல்வி நிலையங்களில் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் காமராஜர். அத்தகைய புரட்சிக்கு வித்திட்ட தமிழகத்தில், மற்றுமொரு புரட்சி 1,545 அரசு தொடக்க பள்ளிகளில் முதற்கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்தை ரூ.33.56 கோடி செலவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கியிருப்பதை மனதார வரவேற்கிறேன்.

இதன்மூலம் மாணவர்கள் குறிப்பாக, மலைப்பகுதிகளில் இருக்கிற மாணவர்கள் பெருமளவில் பயனடைகிற வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த முயற்சி விரிவுபடுத்தப்பட்டு அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இத்தகைய அரிய முயற்சிகளை மிகுந்த நிதி நெருக்கடியான சூழலிலும் அறிமுகப்படுத்தியிருக்கிற தமிழக முதல்-அமைச்சரை பாராட்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்