கடலூர் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகை

கடலூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டு, மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 94 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-11 18:45 GMT

பா.ஜ.க.வினர் திரண்டனர்

சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலகக்கோரியும், தமிழக அரசை கண்டித்தும் கடலூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக பா.ஜ.க. கடலூர் கிழக்கு மாவட்ட ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று பா.ஜ.க. மாநில செயலாளர் அஸ்வத்தாமன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் புதுப்பாளையம் தரைக்காத்த காளியம்மன் கோவில் எதிரில் திரண்டனர். தொடர்ந்து அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அதையடுத்து அவர்கள் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் நோக்கி செல்ல முற்பட்டனர்.

அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையிலான போலீசார், தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து போராட்டத்திற்கு அனுமதி பெறவில்லை. ஆகவே அனைவரையும் கைது செய்யப்போவதாக போலீசார் தெரிவித்தனர். அதற்கு அவர்கள் கோஷம் மட்டும் போட்டு விட்டு கலைந்து செல்வதாக கூறினர். அதை போலீசார் ஏற்றுக்கொள்ளவில்லை.

மறியல்

இதற்கிடையில் நிர்வாகிகள் சிலர் அருகில் இருந்த இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்திற்கு ஓடிச்சென்று முற்றுகையிட்டனர். உடன் மற்றவர்களும் அங்கு வந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்ய முயன்ற போது, புதுப்பாளையம் மெயின்ரோட்டில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் சேகர்பாபு பதவி விலகக்கோரி கோஷமிட்டனர். தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்ய முயன்ற போது, அவர்களுக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளு, முள்ளு உருவானது.

94 பேர் கைது

அதையடுத்து மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து, வேனில் ஏற்றிச் சென்றனர். மொத்தம் 94 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்