தூத்துக்குடியில் பா.ஜ.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா:1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

தூத்துக்குடியில் பா.ஜ.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா: 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வழங்கினார்.;

Update: 2022-12-21 18:45 GMT

தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ வழங்கினார்.

கிறிஸ்துமஸ் விழா

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா சார்பில், கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாலை தூத்துக்குடியில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமை தாங்கினார். சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் ஜெ.வி.அசோகன் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா, மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி, பா.ஜ.க. சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்து கொண்டு ரூ.7 லட்சம் மதிப்பில் 1,000 பேருக்கு புத்தாடைகள், தையல் எந்திரம் ஆகியவற்றை வழங்கி பேசினர்.

ஒன்றாக..

விழாவில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பேசும்போது, ''பா.ஜனதா எல்லா மதத்துக்குமான கட்சி. மதங்கள் வேறுபட்டாலும் மனம் ஒன்றுதான். மனதளவில் ஒன்றாக இறைவனை பார்க்க வேண்டும். பிரதமர் மோடி அனைத்து மதத்தையும் ஒன்றாக பார்க்க வேண்டும் என்று கூறி உள்ளார். எங்களுக்கு எல்லா மதமும் ஒன்றுதான். சாதி, மத பேதம் இன்றி இந்தியர் என்பதில் நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டவர்கள்தான்'' என்று கூறினார்.

விழாவில் சசிகலாபுஷ்பா பேசும்போது, ''பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பொய் சொல்வதாக தி.மு.க.வினர் கூறி வருகின்றனர். ஆனால் தி.மு.க.வினர்தான் பொய்களை கூறிக் கொண்டு இருக்கின்றனர். தலைவர் அண்ணாமலை சொந்தமாக உழைத்து, மெரிட்டில் ஐ.பி.எஸ். ஆகி வந்தவர். அதனை அவர் கூறுவதில் தவறு இல்லை. தி.மு.க அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொய்களை கூறி வருகிறது. எங்கள் தலைவரை பற்றி அவதூறாக பேசக்கூடாது. சத்துணவில் மாணவர்களுக்கு நல்ல தரமான முட்டைகளை வழங்க வேண்டும். தூத்துக்குடியில் தரமான சாலை அமைக்கப்படவில்லை. கால்வாய்கள் அமைக்கப்படவில்லை. தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று தி.மு.கவினர் கூறிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களால் 40 தொகுதிகளிலும் ஜெயிக்க முடியாது'' என்று கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் பா.ஜ.க. மாநில சிறுபான்மை அணி பொதுச்செயலாளர் சதீஷ்ராஜா, மாவட்ட பொதுச்செயலாளர் உமரி எஸ்.சத்தியசீலன், வக்கீல் அணி மாவட்ட செயலாளர் சின்னத்தம்பி பாண்டியன், தலைவர் சுரேஷ்குமார், ஓ.பி.சி. அணி மாநில செயலாளர் விவேகம் ரமேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் எஸ்.பி.வாரியார் தொகுத்து வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்