அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது - பாஜக தலைவர் அண்ணாமலை

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

Update: 2023-02-04 08:18 GMT

சென்னை,

பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

எப்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதோ அப்போதே பாஜக கட்சி தலைவராக நான் தெளிவாக ஒரு விஷயத்தை கூறி இருந்தேன். கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் இந்த தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.

குறிப்பாக, அசுர பணபலம், படைபலத்தை எதிர்க்க வேண்டுமென்றால் ஒரு வேட்பாளர் நிறுத்தப்படவேண்டுமென்று தொடர்ந்து கூறினோம். அதன்பின்னர், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வத்திடம் தொலைபேசியில் பாஜக தேசிய தலைவர் அறிவுறுத்தலின் பெயரில் கடந்த 8 நாட்களில் நான் பல முறை பேசியுள்ளேன்.

கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் நமது கூட்டணியில் அதிமுக போட்டியிடவேண்டும், அதுவும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவேண்டும் என்பதற்காகத்தான் பாஜக கடந்த 8 நாட்களாக பல முயற்சிகளை கையில் எடுத்து பேசினோம்.

குறிப்பாக, எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பாக தொலைபேசியில் என்னை அழைத்து 31-ம் தேதி வரை நான் காத்திருக்கிறேன். அதன் பின் நான் வேட்பாளரை அறிவிக்கப்போகிறேன் என்று கூறி அறிவித்தார்.

ஈபிஎஸ் வேட்பாளரை அறிவித்ததால் நானும் வேட்பாளரை அறிவிக்கிறேன் என்று ஓபிஎஸ்-ம் வேட்பாளரை அறிவித்தார்.

இந்த எல்லா நேரத்திலும் பாஜகவின் உறுதியான நிலையான நிலைப்பாடு என்னவென்றால், கூட்டணி கட்சியின் உட்கட்சி பிரச்சினைகளில் தலையிடமாட்டோம் என்பது எங்கள் உறுதியான நிலைப்பாடாக உள்ளது. இவை அனைத்தையும் பொறுமையாக பார்த்துக்கொண்டிருந்தோம்.

ஒரு வேட்பாளர், வலிமையான வேட்பாளர் நிறுத்தப்படவேண்டும் என்ற எங்கள் எண்ணத்தில் துளியும் சந்தேகம் இல்லாமல் பயணித்தோம்.

அதனால் தான் பாஜக தலைவர் ஜேபி நட்டா அறிவுறுத்தலில் பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி நேற்று சென்னை வந்தார்.

அவருடன் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு சென்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா சொல்லியதை சொல்லிவிட்டு வந்தோம். அதிலும் குறிப்பாக, ஒரு வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் அது தான் எங்கள் விருப்பமும் கூட... அந்த வேட்பாளருக்கு முழு ஆதரவையும் கொடுத்து நாங்கள் உழைப்பதற்கு தயார். அந்த வேட்பாளரும் சின்னத்தில் நிற்க வேண்டும். அப்போது தான் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும். சின்னம் என்பது கூடுதல் பலம். இதை எடப்பாடி பழனிசாமியிடம் கூறிவிட்டு ஓ பன்னீர் செல்வம் வீட்டிற்கு சென்று அங்கேயும் எங்கள் வாதத்தை வைத்தோம்.

ஒரு வேட்பாளர் நிறுத்துவது தான் முறை. அதனால் ஓ பன்னீர் செல்வத்திற்கு நாங்கள் ஒரு வேண்டுகோள் வைத்தோம். 4 நாட்களுக்கு முன் பாஜக தேசிய தலைவர் நட்டா அறிவுறுத்தலில் அதேவேண்டுகோளை தொலைபேசியில் வைத்தோம். நேற்று ஓ பன்னீர் செல்வத்திடம் நேரில் வைத்த கோரிக்கை என்னவென்றால் கட்சி நலனுக்காக, தமிழ்நாட்டின் நலனுக்காக குறிப்பாக இடைத்தேர்தல் என்பது முக்கியமான தேர்தல் அதற்காக ஓ பன்னீர் செல்வம் இன்னும் அதிகமாக அனைவருடன் இணைந்து எல்லோரும் இணைந்து ஒரு வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியின் வேட்பாளர் 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த வேட்பாளர், அந்த பகுதியில் இருக்கக்கூடிய வேட்பாளர் அவருக்கு நாம் ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளை ஓ.பன்னீர் செல்வத்திடம் வைத்துவிட்டு வந்தோம். ஓபிஎஸ் தனது கருத்துக்களை தெரிவித்தார்.

குறிப்பாக தான் கையெழுத்து போடுவதற்கு தயார்... மற்றும் சில நிபந்தனைகளை கூறினார். அதனால் தான் நேற்று சிடி ரவி கூறும்போது நாங்கள் என்ன பேசினோம் என்ற விஷயத்தை உங்களிடம் கூறமாட்டோம் என்று சொன்னார்.

இப்போதும் நான் சொல்லவில்லை இருந்தாலும் கூட்டணி கட்சியின் வேறு சில தலைவர்களுக்கு இதை தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காக, அதன் பின்னர் ஓபிஎஸ் தனக்கு இன்னும் சிறிது நேரம் வேண்டும். தான் எல்லாவிதமான யோசனைகள் பேசிவிட்டு வருவதாக கூறினார். அதன் பின்னர் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நாம் நேற்று பார்த்தோம். தீர்ப்பு தொடர்பாக ஈபிஎஸ் - ஓபிஎஸ் அறிக்கை கொடுத்துள்ளனர்.

எங்கள் நோக்கம் ஒரே வேட்பாளர்... குறிப்பாக இரட்டை இலை சின்னத்தில் இடைத்தேர்தலில் போட்டியிடவேண்டும்... அது எங்கள் வேண்டுகோள். அதற்கு அந்த வேட்பாளரோடு இணைந்து களப்பணியாற்றி முழுவதுமாக எங்கள் கட்சியினர் களத்திற்கு வந்து அந்த வேட்பாளரை வெற்றிபெற செய்வதற்கு உறுதியாக பாடுபடுவதற்கு என்ற உறுதிமொழியை கூட எடப்பாடி பழனிசாமியிடம், ஓ.பன்னீர் செல்வத்திடம் கொடுத்துவிட்டு வந்தோம். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிடுவதில்லை என்பதே பாஜகவின் நிலைப்பாடு' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்