சக்கரக்கோட்டை சரணாலயத்தை விட்டு நகராத பறவைகள்

ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலயத்தில் கண்மாய் தண்ணீர் வற்றி வரும் நிலையிலும் அங்கு கூடுகட்டி தங்கி உள்ள பறவைகள் இரைதேடி திரிந்து வருகின்றன.

Update: 2023-07-29 18:45 GMT

ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலயத்தில் கண்மாய் தண்ணீர் வற்றி வரும் நிலையிலும் அங்கு கூடுகட்டி தங்கி உள்ள பறவைகள் இரைதேடி திரிந்து வருகின்றன.

பறவைகள் சரணாலயம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பறவைகள் சரணாலயங்களுக்கு ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் உணவுக்காக இரையை தேடி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் வருகை தந்து கூடுகட்டி தங்களின் உணவுத்தேவையை பூர்த்தி செய்து சீசன் முடிந்ததும் ஏப்ரல் மாத இறுதியில் திரும்பி செல்ல தொடங்குவது வழக்கம்.

கடந்த ஆண்டு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை சரியாக பெய்யாததால் நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு காணப்பட்டன. ராமநாதபுரம் பெரிய கண்மாயில் மட்டும் வைகை தண்ணீர் வரத்தால் ஓரளவு நீர் இருந்ததால் அதில் உள்ள மரங்களில் கூடுகள் கட்டி தங்கியிருந்த பறவைகள் ஏமாற்றத்துடன் தங்கள் வாழ்விடத்தை நோக்கி சென்றுவிட்டன.

வறண்ட கண்மாய்

இதன்காரணமாக மாவட்டத்தின் தேர்த்தங்கல் சரணாலயம் உள்ளிட்டவைகளில் பறவைகள் இன்றி கடும் நிசப்தமாகவும், சரணாலய பகுதி முழுவதும் பறவைகள் இன்றி வெறும் மொட்டை மரங்களாகவே காட்சி அளித்தது. வடகிழக்கு பருவமழை சரியாக பெய்யாததால் நீர்நிலைகள் வறண்டு கிடப்பதாலும், வயல்வெளிகளில் பயிர்கள் கருகி விட்டதாலும் உணவுக்கு வழியின்றி அதிகமான பறவைகள் வரவில்லை.

கடந்த ஆண்டுகளில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான பறவைகள் சரணாலயங்களுக்கு வந்த நிலையில் கடந்த ஆண்டு மொத்தமே 7 ஆயிரம் பறவைகள்தான் மாவட்டம் முழுவதும் வந்துள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் அருகே உள்ள சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலய பகுதியில் கடந்த ஆண்டு வைகை தண்ணீர் அதிகளவில் வந்ததால் கடந்த சில நாட்களுக்கு முன்புவரை குறையாமல் கடல்போல் காட்சி அளித்தது.

சுற்றி திரியும் பறவைகள்

இந்த ரம்மியமான சூழ்நிலை காரணமாக கண்மாய் பகுதியில் உள்ள மரங்களில் ஏராளமான பறவைகள் தங்களின் உணவுத்தேவைக்காக கூடு கட்டி வசித்து வந்தன. மற்ற சரணாலயங்களில் பறவைகள் இன்றி சீசன் முடிவுக்கு வந்தநிலையில் சக்கரக்கோட்டை கண்மாயில் மட்டும் வைகை தண்ணீர் இருந்து வந்ததால் அதிகளவில் பறவைகள் கூடுகட்டி தண்ணீரில் உள்ள மீன்கள், புழுக்கள் உள்ளிட்ட உணவுகளை உண்டு பறந்து திரிந்துவந்தன.

தற்போது சக்கரக்கோட்டை கண்மாயில் பெரும்பாலான பகுதியில் தண்ணீர் முழுமையாக வற்றி விட்டது. ஆனால், ஆர்.எஸ்.மடையை ஒட்டிய பகுதியில் உள்ள சக்கரக்கோட்டை கண்மாயின் கடைசி பகுதியில் மட்டும் தண்ணீர் இன்னும் உள்ளது. இந்த தண்ணீரை ஒட்டிய பகுதியில் உள்ள மரங்களில் கூடு கட்டி வாழ்ந்து வரும் பறவைகள் தண்ணீரில் உள்ள புழு பூச்சிகள், மீன்களை உண்டு பசியை போக்கி வருகின்றன. 

Tags:    

மேலும் செய்திகள்