வெளிநாடுகளில் இருந்து ஓசூருக்கு இடம் பெயர்ந்த பறவைகள்

Update: 2023-02-23 19:15 GMT

ஓசூர்:-

வெளிநாடுகளில் இருந்து ஓசூருக்கு இடம் பெயர்ந்த பறவைகளை ஏராளமானவர்கள் கண்டு ரசித்தனர்.

வெளிநாட்டு பறவைகள்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் செயல்பட்டு வரும் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இயற்கையின் வரமாக அமைந்திருக்கும் பல்லுயிர்களை பேணுவதிலும், பாதுகாப்பதிலும் உத்வேகத்துடன் நடவடிக்கைகளை டி.வி.எஸ். நிறுவனம் எடுத்து வருகிறது. இந்த தொழிற்சாலையில் 50 ஏக்கர் பரப்பளவில் காடு, ஆயிரக்கணக்கான மரங்கள், பறவைகள் சரணாலயம், வண்ணத்துப்பூச்சி பூங்கா, தாவரவியல் பூங்கா, ஆர்கானிக் கம்போஸ்ட் மையம் மற்றும் 18 குளங்கள் என இயற்கை நிறைந்த பசுமை படர்ந்த பல்லுயிர்களின் இல்லமாக இருந்து வருகிறது.

இந்த சரணாலயம் கடந்த 22 ஆண்டுகளாக மஞ்சள் மூக்கு நாரைகளின் இனப்பெருக்க பிரதேசங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இங்கு, இந்த மஞ்சள் மூக்கு நாரைகள் தங்கள் கூடுகளைக் கட்டுகின்றன. தங்களது குஞ்சுகளை இந்தக்கூட்டில் வைத்து வளர்க்கின்றன. குஞ்சுகள் வளர்ந்த பின்னர் அவற்றை பல்வேறு பிரதேசங்களில் இருக்கும் தங்களது இல்லப்பகுதிகளுக்கு அழைத்துச் செல்கின்றன.

பறவைகள் கணக்கெடுப்பு

இயற்கையின் இந்த அதிசயங்கள் அனைத்தும் தொழிற்சாலையில் மிகப் பரபரப்பாக நடக்கும் அன்றாட உற்பத்தி செயல்பாடுகளுக்கு மத்தியில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு வனத்துறை சார்பில் ஓசூர் வனப்பிரிவு சமீபத்தில் பறவைகள் கணக்கெடுப்பை மேற்கொண்டது. அந்த பறவைகள் கணக்கெடுப்பின் போது 50-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களின் உதவியுடன் 15 நீர்நிலைகளில் 100-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் கண்டறியப்பட்டன.

இந்த பறவை இனங்கள் அடையாளம் காணப்பட்டு கணக்கெடுப்பின் போது பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் வெளிநாடுகளில் இருந்து ஓசூர் வந்த மஞ்சள் மூக்கு நாரைகள் ஈரநிலப்பகுதிகளில் கூடு கட்டியிருப்பது தெரியவந்துள்ளது. இயற்கையின் மீதான ஆர்வத்தையும், இயற்கை தொடர்பான கல்வியையும், ஊக்குவிக்கும் வகையில் சரணாலயத்தில், பள்ளி மாணவர்கள் வந்து பார்வையிடும் வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பறவைகளை பள்ளி மாணவர்கள் உள்பட ஏராளமானவர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்