கம்பி வேலியை அகற்றியதால் இருதரப்பினர் மோதல்: சாலை மறியல்
தோகைமலை அருகே கம்பி வேலியை அகற்றியதால் இருதரப்பினர் மோதலில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியல் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்விரோதம்
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள காவல்காரன்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 48). இவர் தனது வீட்டின் அருகே சொந்தமாக சிமெண்டு கற்களை (ஹாலோ பிளாக்) தயாரித்து விற்கும் தொழில் செய்து வருகிறார்.
இதற்காக அவர் தனது வீட்டை சுற்றி கம்பிவேலி அமைத்துள்ளார். இந்தநிலையில் தங்கவேலுக்கும், அவரது வீட்டின் அருகே வசிக்கும் உறவினரான வெள்ளைச்சாமிக்கும் இடையே விவசாய நிலம் சம்பந்தமான முன்விரோதம் இருந்து வருகிறது.
தகராறு
இந்தநிலையில் நேற்று மாலை வெள்ளைச்சாமி மற்றும் அவரது தரப்பினை சேர்ந்தவர்கள் தங்வேலு வீட்டிற்கு வந்து, வெள்ளைச்சாமி நிலத்தில் எப்படி கம்பிவேலி அமைக்கலாம் என கூறியும், தகாதவார்த்தையால் திட்டியும் அவற்றை அகற்றி உள்ளனர். இதனை தடுக்க முயன்ற தங்கவேலுவின் உறவினர்களையும் அவர்கள் மிரட்டி தகராறில் ஈடுபட்டு உள்ளனர். இதுகுறித்து தோகைமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதற்குள் கம்பி வேலியை அகற்றி விட்டு அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
சாலை மறியல்
இதற்கிடையில், கம்பிவேலியை அகற்றியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி தங்கவேல் மற்றும் அவரது உறவினர்கள் காவல்காரன்பட்டியில் உள்ள தோகைமலை- திருச்சி மெயின் சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தோகைமலை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உங்கள் கோரிக்கை குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து தங்கவேல் கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.