காட்டுயானை நடமாட்டம் இருப்பதால் கவனமுடன் செல்ல வேண்டும்
மசினகுடி-ஊட்டி சாலையில் காட்டுயானை நடமாட்டம் இருப்பதால் கவனமுடன் செல்ல வேண்டும் என்று வாகன ஓட்டிகளுக்கு, வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கூடலூர்
மசினகுடி-ஊட்டி சாலையில் காட்டுயானை நடமாட்டம் இருப்பதால் கவனமுடன் செல்ல வேண்டும் என்று வாகன ஓட்டிகளுக்கு, வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டுயானை நடமாட்டம்
மசினகுடி வனப்பகுதியில் காட்டு யானை, புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. தற்போது கோடை வெயிலின் தாக்கம் காரணமாக பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை தேடி இடம் பெயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் மசினகுடியில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் உள்ள பாலத்தில் கடந்த சில நாட்களாக காட்டு யானை நடமாட்டம் அதிகரித்துள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள ஆற்று நீரை குடிப்பதற்காக பகல் நேரத்திலும் காட்டுயானை வந்து முகாமிடுகிறது. தொடர்ந்து மூங்கில் காட்டுக்குள் சில சமயங்களில் நிற்கிறது. வனத்தில் வறட்சியான காலநிலை நிலவுவதால் இதுவரை இல்லாத வகையில் காட்டு யானை அப்பகுதிக்கு வந்துள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
வனத்துறை எச்சரிக்கை
இதுகுறித்து வனத்துறையினர் தரப்பில் கூறியதாவது:-
கோடை மழை நன்கு பெய்யும் என எதிர்பார்த்த நிலையில் மாறாக வறட்சியின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் உணவு, தண்ணீரை தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருகிறது. மசினகுடி சுற்றுவட்டார பகுதிகளில் கோவில் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.
இதனால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும். தற்போது கூடலூர் சுற்றுவட்டார பகுதியில் மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்கிறது. இதேபோல் மசினகுடியில் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் வனப்பகுதி பசுமைக்கு திரும்ப வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.