கலை-அறிவியல் கல்லூரிகளில் பி.காம். 2-ம் ஆண்டு நேரடி சேர்க்கையை பின்பற்ற வேண்டும் - கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு

கலை-அறிவியல் கல்லூரிகளில் பி.காம். 2-ம் ஆண்டு நேரடி சேர்க்கையை பின்பற்ற வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-08-12 01:24 GMT

சென்னை,

கல்லூரிக் கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி, அனைத்து கல்லூரிக்கல்வி இணை இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஆண்டு (2021) உயர்கல்வித் துறை அரசாணையில் கூறப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, 2022-23-ம் கல்வியாண்டில் நேரடியாக பி.காம். 2-ம் ஆண்டில், வணிகவியல் பயிற்சி பட்டயப்படிப்பு (டிப்ளமோ) மற்றும் வணிகவியல் பயிற்சி கணினி பயன்பாடுகள் பட்டயப்படிப்பு (டிப்ளமோ) முடித்த மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேர்க்கை அளிக்க அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி கல்லூரி முதல்வர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.

இதுதொடர்பாக 2022-23-ம் ஆண்டின் மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறைகளிலும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சில கல்லூரிகளில் பி.காம். 2-ம் ஆண்டு நேரடி சேர்க்கை செய்யப்படவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே உயர்கல்வித்துறை அரசாணையில் தெரிவித்த பி.காம். 2-ம் ஆண்டு நேரடி சேர்க்கையினை பின்பற்ற அறிவுரைகளை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்