வங்கி மேலாளர் வீட்டில் ரூ.9 லட்சம் நகை-பணம் கொள்ளை

பண்ருட்டியில் 17-ந் தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில் வங்கி மேலாளர் வீட்டில் ரூ.9 லட்சம் நகை-பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2023-08-31 18:45 GMT

பண்ருட்டி, 

உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக சென்றபோது நடந்த இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வங்கி மேலாளர்கள்

பண்ருட்டி எல்.என்.புரம் குமரன் நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மனைவி புஷ்பலதா (வயது 51). இவர்களுடைய மகன்கள் விக்ரம், அஸ்வின்குமார்(28). இதில் விக்ரமுக்கு திருமணமாகி புதுச்சேரியில் தங்கியிருந்து அங்குள்ள கனரா வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். அஸ்வின்குமாா் கடலூரில் உள்ள இந்தியன் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். ரவிச்சந்திரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால், புஷ்பலதா தனது 2-வது மகன் அஸ்வின்குமாருடன் பண்ருட்டியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அஸ்வின்குமாருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற 17-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக இருவீட்டாரும் தங்களது நண்பர்கள், உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

திருமண அழைப்பிதழ் கொடுக்க...

அந்த வகையில் நேற்று முன்தினம் புஷ்பலதாவும், அஸ்வின்குமாரும் புதுச்சேரியில் உள்ள உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக சென்றனர். பின்னர் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரியில் உள்ள விக்ரம் வீட்டில் தங்கினர்.

இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை அக்கம்பக்கத்தினர் பார்த்து புஷ்பலதாவுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர். இதில் திடுக்கிட்ட புஷ்பலதாவும், அஸ்வின்குமாரும் உடனடியாக வீட்டிற்கு புறப்பட்டு வந்தனர்.

ரூ.9 லட்சம் நகை-பணம் கொள்ளை

தொடர்ந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. மேலும் பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. அதை சோதனை செய்து பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 15 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் ரொக்கம், 3 கிலோ வெள்ளி நகைகளை காணவில்லை.

வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மா்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.9 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

வலைவீச்சு

இதுபற்றி தகவல் அறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்து சென்றனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

வங்கி மேலாளர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பண்ருட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்