சென்னை உலக செஸ் ஒலிம்பியாட்டை முன்னிட்டு விழிப்புணர்வு மாரத்தான்

சென்னை உலக செஸ் ஒலிம்பியாட்டை முன்னிட்டு பெரம்பலூாில் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.

Update: 2022-07-16 18:56 GMT

சென்னை மாமல்லபுரத்தில் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந்தேதி தொடங்க உள்ளது. இதனை பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "நம்ம செஸ் நம்ம பெருமை" மாரத்தான் ஓட்டம் பெரம்பலூரில் நேற்று நடந்தது. மாரத்தான் ஓட்டத்தை பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, பிரபாகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஓடினர். மாரத்தான் பாலக்கரை வரை சென்று மீண்டும் கலெக்டர் அலுவலகத்தில் வந்து நிறைவடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் செய்திருந்தது. மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்ட தன் புகைப்படம் (செல்பி பாய்ண்ட்) எடுப்பதற்கான அமைப்பில் கலெக்டருடன், மாரத்தான் ஓடிய மாணவ-மாணவிகள் செல்போனில் புகைப்படம் எடுத்து கொண்டனர். தமிழக முதல்-அமைச்சர் பங்கேற்று தமிழ்நாடு திரைப்பட பிரிவின் சார்பில் வெளியிடப்பட்ட செஸ் ஒலிம்பியாட் குறித்த வெல்கம் டூ நம்ம ஊரு சென்னை" என்று தொடங்கும் விழிப்புணர்வு விளம்பர வீடியோவினை பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன வீடியோ வாகனம் மூலம் ஒளிபரப்பும் பணிகளை கலெக்டர், எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ் குமார், நகர்மன்ற துணைத்தலைவர் ஹரி பாஸ்கர், உடற்கல்வி ஆசிரியர் அறிவுவேல் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்