கால்நடைகளை சிறந்த முறையில் வளர்த்தவர்களுக்கு விருது

கால்நடைகளை சிறந்த முறையில் வளர்த்தவர்களுக்கு கலெக்டர் மேகநாதரெட்டி விருதினை வழங்கினார்.

Update: 2022-11-04 18:51 GMT

காரியாபட்டி,

கால்நடைகளை சிறந்த முறையில் வளர்த்தவர்களுக்கு கலெக்டர் மேகநாதரெட்டி விருதினை வழங்கினார்.

விழிப்புணர்வு முகாம்

காரியாபட்டி அருகே வலுக்கலொட்டி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை மூலம் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமினை கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைத்தார். விருதுநகர் மாவட்டத்தில் 2022-2023 ஆண்டில் 220 சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நவம்பர் 2022 முதல் பிப்ரவரி 2023 வரை ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 20 முகாம் வீதம் 11 ஊராட்சி ஒன்றியத்தில் 220 கிராமங்களில் நடத்தப்பட உள்ளன.

இந்த முகாம்களில் நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம் செய்தல், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை ஆய்வு, கருப்பை மருத்துவ சிகிச்சைகள் போன்ற நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு பிரசாரம் ஆகிய அனைத்தும் இலவசமாக மேற்கொள்ளப்படவுள்ளது.

கன்று உரிமையாளர்களுக்கு பரிசு

சிறந்த கால்நடை வளர்ப்பு முறைகளை பின்பற்றிய 3 சிறந்த விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு விருதுகளையும், கிடேரி கன்று பேரணி நடத்தப்பட்டு சிறந்த 3 கன்று உரிமையாளர்களுக்கு பரிசுகளையும், விவசாயிகளுக்கு கால்நடை தீவனபயிர்களையும், கால்நடை வளர்ப்போருக்கு தாது உப்பு கலவையினையும், கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள், உதவி மருத்துவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டு சிகிச்சை பணிகளை மேற்கொண்டனர். இதில் மண்டல இணை இயக்குனர் (கூடுதல் பொறுப்பு) கோயில்ராஜா, உதவி இயக்குனர் கார்த்திகேயன், கால்நடை டாக்டர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்