தே-பிரித்தோ பள்ளி, ஆசிரியருக்கு சர்வதேச விருது
தே-பிரித்தோ பள்ளி, ஆசிரியருக்கு சர்வதேச விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
தேவகோட்டை
79 ஆண்டு பழமையான கல்வி நிறுவனம் தேவகோட்டையை சேர்ந்த தே-பிரித்தோ மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட பள்ளிசார் இயக்கம் கடந்த 1979-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பள்ளியின் முதுகலை வரலாற்று ஆசிரியர் ஜெயசீலன் நாட்டு நலப்பணி திட்ட அலுவலராகவும் பணிபுரிந்து வருகிறார்.
கானத்தான்காடு, சடையன்காடு கிராமங்களில் பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட இயக்கம் நடத்திய கிராமிய முகாம் கல்வி அதிகாரிகள் மற்றும் அப்பகுதி மக்களிடம் மிகப்பெரிய பாராட்டை பெற்றது. இதன் காரணமாக இந்த இயக்கம் செய்து முடித்த சேவை பணிகள் காரணமாகவும், கவியரசர் கலைத்தமிழ்ச்சங்கம் மற்றும் மலேசியா பாரதி கற்பனைத்தளம் என்கிற பன்னாட்டு அமைப்பு, என்.எஸ்.எஸ். இயக்கத்தை சிறந்த அமைப்பாகவும், பள்ளியின் திட்ட அலுவலர் ஜெயசீலனை தலைசிறந்த அமைப்பாளராகவும் தேர்ந்தெடுத்து சர்வதேச விருது, சான்றிதழ்கள் வழங்கி பாராட்டியது.
இதற்கான பாராட்டு விழாவில் தாளாளர் வின்சென்ட் அமல்ராஜ் பள்ளிக்கான விருதை தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமிக்கும், சிறந்த திட்ட அலுவலருக்கான விருதை ஜெயசீலனுக்கும் வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் நிர்வாக அருட்தந்தையர்கள் பாபு வின்சென்ட், இருதய வளனரசு, பள்ளியின் ஊடக தொடர்பாளர் நல்லாசிரியர் கவிஞர் பிரைட், உதவி தலைமையாசிரியர் செல்வக்குமார், ஆசிரிய அலுவலர் சங்க செயலாளர் பவுலியன்ஸ், பள்ளி என்.எஸ்.எஸ். உதவி திட்ட அலுவலர் வேதமாணிக்கம், பள்ளி சார் இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளர் செபாஸ்டின் ராஜேந்திரன், மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.