நல்லாசிரியர் விருதுக்கான பரிசுத்தொகையை பள்ளி கழிவறையை சரிசெய்ய வழங்கிய ஆசிரியை
நல்லாசிரியர் விருதுக்கான பரிசுத்தொகையைபள்ளி கழிவறையை சரிசெய்ய ஆசிரியை வழங்கினார்.
முதுகுளத்தூர்,
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர், உமாதேவி. இவர் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வானவர்.
கடந்த 5-ந் தேதி ஆசிரியர் தினத்தையொட்டி சென்னையில் நடந்த விழாவில், ஆசிரியை உமாதேவிக்கு விருதும், ரூ.10,000 பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. அவருக்கு சக ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
மேலும் அவர் பள்ளிக்கு வந்தபோது, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் திரண்டு வரவேற்றனர். அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் வட்டார கல்வி அலுவலர்கள் வேல்முருகன், இந்திராகாந்தி, தலைமை ஆசிரியை ஜோசப் விக்டோரியா ராணி, பள்ளி மேலாண்மை குழு தலைவி செல்வராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பள்ளியில் கழிப்பறை உள்ளிட்ட கட்டிடங்கள் சேதம் அடைந்து காணப்படுவதால் தனக்கு அரசு வழங்கிய பரிசுத்தொகை ரூ.10 ஆயிரத்தையும், தனது தந்தை மோகன்தாஸ் சார்பாக ரூ.10 ஆயிரத்தையும் சேர்த்து ரூ.20 ஆயிரத்தை பள்ளியின் கட்டிடத்தை சீர்செய்ய தலைமை ஆசிரியையிடம் உமாதேவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.