மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி

சத்துணவு மையத்தில் வேலை கேட்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் தாய் தீக்குளிக்க முயன்ற சம்பவம் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது

Update: 2022-10-03 18:45 GMT

கள்ளக்குறிச்சி

தொழிலாளி

உளுந்தூர்பேட்டை தாலுகா கல் சிறுநாகலூர் கிராமத்தை சோந்தவர் ஏழுமலை. தொழிலாளியான இவருடைய மனைவி செண்பகம்(வயது 44). இவர்களுக்கு முத்தீஸ்குமார் என்ற மகனும், ரூபிணி என்ற மகளும் உள்ளனர். பள்ளியில் படித்து வரும் இவர்கள் மாற்றுத்திறனாளிகள்.

இந்த நிலையில் ஏழுமலை கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதன் பிறகு செண்பகம் கூலி வேலை செய்து பிள்ளைகளை வளர்த்து வருகிறார். இதனால் சிரமப்பட்ட அவர் தனக்கு சொந்தமாக வீடு இல்லை, 2 மாற்றுத்திறனாளி குழந்தைகளை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்படுவதாகவும், எனவே 8-ம் வகுப்புவரை படித்துள்ள தனக்கு கல் சிறுநாகலூர் சத்துணவு மையத்தில் காலியாக உள்ள சமையல் வேலையை வழங்கக்கோரி கடந்த 6 மாதத்துக்கு முன்பு அப்போதைய மாவட்ட கலெக்டராக இருந்த ஸ்ரீதரிடம் மனு கொடுத்தார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தீக்குளிக்க முயற்சி

இதனால் மன வேதனை அடைந்த செண்பகம் நேற்று காலைதனது இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு வந்தார். பின்னர் அவர் பையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை தன் மீதும் தனது குழந்தைகளின் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைப்பார்த்து அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடி சென்று செண்பகத்தின் கையில் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை பிடுங்கினர். பின்னர் குடத்தில் தண்ணீரை பிடித்து வந்து அவர்கள் மீது ஊற்றி தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் போலீசாரின் அறிவுரையின் பேரில் தற்கொலை முயற்சியை கைவிட்ட செண்பகம் தனது 2 குழந்தைகளுடன் கலெக்டர் ஷ்ரவன் குமாரிடம் கோரிக்கை மனு கொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். சத்துணவு மையத்தில் வேலை கேட்டு 2 குழந்தைகளுடன் தாய் தீக்குளிக்க முயன்ற சம்பவம் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்