பெண்ணிடம் நகையை பறிக்க முயற்சி
பொள்ளாச்சியில் பட்டப்பகலில் பெண்ணிடம் நகையை பறிக்க மர்ம ஆசாமிகள் முயன்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் பட்டப்பகலில் பெண்ணிடம் நகையை பறிக்க மர்ம ஆசாமிகள் முயன்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நகை பறிக்க முயற்சி
பொள்ளாச்சி கடை வீதியில் நகைக்கடைகள், ஜவுளி கடைகள், பாத்திர கடைகள் உள்பட பல்வேறு வணிக நிறுவனங்கள் உள்ளன. இதன் காரணமாக கடை வீதியில் எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும். இந்த பகுதியில் நகர கிழக்கு போலீஸ் நிலையமும் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் பொள்ளாச்சி போலீஸ் நிலையத்தை அடுத்த வீதியில் நேற்று மர்ம ஆசாமிகள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து, ஒரு பெண்ணிடம் நகையை பறிக்க முயன்றனர்.
இதற்கிடையே பொதுமக்கள் கூட்டம் கூடியதால் மோட்டார் சைக்கிளில் அவர்கள் தப்பி சென்றனர். இதுகுறித்து நகர கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மர்ம ஆசாமிகள் சென்ற வழியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பதிவை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை கொண்டும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடியோ வைரல்
இதற்கிடையில் நகையை பறிக்க முயன்ற சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரலாகி உள்ளது. அதில் ஒரு மோட்டார் சைக்களில் 2 ஆசாமிகள் கடை வீதி வழியாக வெங்கட்ரமணன் வீதியை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டுபவர் முகக்கவசமும், பின்னால் அமர்ந்து இருப்பவர் ஹெல்மெட் அணிந்திருந்தனர். மோட்டார் சைக்கிளில் பாதி தூரம் சென்று விட்டு பின்னர் 2 பேரும் திரும்பி வந்தனர்.
அப்போது சாலையோரத்தில் நடந்து சென்ற ஒரு பெண்ணின் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றனர். இதில் அந்த பெண் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அதிர்ஷ்டவசமாக அந்த பெண்ணின் கையில் நகை சிக்கியதால் மர்ம ஆசாமிகளால் பறிக்க முடியவில்லை. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆட்கள் நடமாட்டம், போலீஸ் நிலையம் அருகில் நடந்த சம்பவத்தால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். மேலும் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி இதுபோன்ற குற்றங்களை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.