அனுமதியின்றி போராட்டம் நடத்த முயற்சி

சிங்கோனா டேன்டீயை மூட எதிர்ப்பு தெரிவித்து அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்ற வால்பாறை, கூடலூர் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 140 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-13 18:45 GMT

வால்பாறை

சிங்கோனா டேன்டீயை மூட எதிர்ப்பு தெரிவித்து அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்ற வால்பாறை, கூடலூர் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 140 பேர் கைது செய்யப்பட்டனர்.

போராட்ட அறிவிப்பு

கோவை மாவட்டம் வால்பாறை அருகே சிங்கோனா பகுதியில் உள்ள அரசு தேயிலை தோட்ட வளர்ச்சி கழக(டேன்டீ) நிர்வாகத்தை மூடி வனத்துறையிடம் ஒப்படைப்பதற்காக தமிழக அரசு கடந்த மாதம் அரசாணை வெளியிட்டது. இதனால் டேன்டீ பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பத்தினர் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டது.

இது தொடர்பாக வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி, டேன்டீ தொழிலாளர்களை சந்தித்து பேசி, டேன்டீயை மூடும் அரசாணையை நீக்கக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த போவதாக தெரிவித்தார். மேலும் வால்பாறை நகரில் உள்ள பழைய பஸ் நிலையம் பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.

கைது

ஆனால் போராட்டம் நடத்துவதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. எனினும் நேற்று வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி தலைமையில் அ.தி.மு.க. நகர செயலாளர் மயில் கணேசன் முன்னிலையில் கூடலூர் எம்.எல்.ஏ. பொன் ஜெயசீலன், வால்பாறை பகுதி தொழிற்சங்க நிர்வாகிகள் கல்யாணி, பிரபாகரன், அன்பழகன் மற்றும் அதிமுக நகர, கிளை நிர்வாகிகள், தொழிலாளர்கள் உள்பட 140 பேர் போராட்டம் நடத்த நகர அ.தி.மு.க. அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதால் கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்லாததால், 140 பேரையும் கைது செய்து வேனில் ஏற்றினர். தொடர்ந்து தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, மாலை 5 மணியளவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

பரபரப்பு

முன்னதாக வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி கூறும்போது, இந்த கைது நடவடிக்கையை கண்டிக்கிறேன். டேன்டீயை மூடும் அரசாணையை தமிழக அரசு ரத்து செய்யும் வரை தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்றார். இந்த சம்பவத்தால் வால்பாறையில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையொட்டி வால்பாறை உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு கீர்த்திவாசன் தலைமையில் 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்