சட்டசபை பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை பேட்டி

தமிழ்நாடு அரசின் அமைச்சரவை எழுதி கொடுப்பதை படிப்பவர் தான் கவர்னர் எனவும், அவரால் சட்டம் நிறைவேற்றவோ, தர்பார் நடத்தவோ முடியாது என சட்டசபை பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை கூறினார்.

Update: 2023-09-27 20:11 GMT

தமிழ்நாடு அரசின் அமைச்சரவை எழுதி கொடுப்பதை படிப்பவர் தான் கவர்னர் எனவும், அவரால் சட்டம் நிறைவேற்றவோ, தர்பார் நடத்தவோ முடியாது என சட்டசபை பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை கூறினார்.

ஆய்வு

தஞ்சை அரண்மனை வளாகத்தில் சர்ஜா மாடி கட்டிடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு மற்றும் சீரமைப்பு பணியையும் தமிழ்நாடு சட்டசபை பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் கலெக்டர் தீபக் ஜேக்கப் முன்னிலையில் பொதுக்கணக்கு குழு உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன், அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, இனிகோ இருதயராஜ், ஈஸ்வரன், உதயசூரியன், கார்த்திகேயன், சேகர், பாலாஜி ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அரண்மனையின் எழிலார்ந்த சிற்பங்களையும், தர்பார் மண்டபத்தில் நடைபெறும் சீரமைப்பு பணியையும் பார்வையிட்டனர்.

அப்போது, அலுவலர்கள் கொடுத்த திட்ட அறிக்கையில் கவர்னரின் அறிவிப்புப்படி எனக்குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பார்த்து கோபமடைந்த குழுவினர் அந்த வார்த்தையை நீக்குமாறு அலுவலர்களிடம் அறிவுறுத்தினர். இதையடுத்து நிருபர்களிடம் குழு தலைவர் செல்வபெருந்தகை கூறியதாவது:-

அதிகாரிகளுக்கு அறிவுரை

தஞ்சை மாவட்டத்தில் சட்டப்பேரவைப் பொதுக் கணக்கு குழு ஆய்வு செய்து வருகிறது. காலையில் தஞ்சாவூர் சரபோஜி மண்டபம், தர்பார் கூடத்தை ஆய்வு செய்தோம். குறிப்பாக, 18-ம் நூற்றாண்டில் சரபோஜி மண்டபத்தை ரூ.9.12 கோடி மதிப்பில் புதுப்பிக்கும் பணி நடைபெறுகிறது. இது தொடர்பான அறிக்கையில் கவர்னரின் அறிவிப்பின்படி என எழுதியுள்ளனர். அது, கவர்னரின் அறிவிப்புப்படி அல்ல, தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். எனவே அதை மாற்றும்படி சொல்லியுள்ளோம். இது போன்ற தவறுகளை அதிகாரிகள் செய்யக் கூடாது என அறிவுறுத்தியுள்ளோம்.

தமிழ்நாடு அரசின் அமைச்சரவை எழுதிக் கொடுப்பதைப் படிப்பவர்தான் கவர்னர். அவர் இங்கு சட்டம் நிறைவேற்றவோ, தர்பார் நடத்தவோ முடியாது. அந்த காலத்தை போன்று இப்போது யாரும் படையெடுக்க முடியாது. இப்போது நடைபெறுவது முடியாட்சி அல்ல, குடியாட்சி நடைபெறுகிறது. இப்போது மக்களாட்சி நடைபெறுவதால், கவர்னர் பெயர் இருப்பதை எடுக்குமாறு கூறியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மருந்தாளுனர்களுக்கு எச்சரிக்கை

பின்னர் அவர்கள், ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மருந்துகள் இருப்பு பிரிவு, கண் சிகிச்சை பிரிவு ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கல்லூரியின் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படுகிற மாணவிகள் விடுதிகளில் அடிப்படை வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். குருங்குளம் மேற்கு கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நில தொகுப்பு வேளாண் பொறியியல்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் பார்த்து ஆய்வு செய்தனர். பின்னர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

இதில் கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், பொதுக்கணக்கு குழுவின் சார்பு செயலாளர் பாலசீனிவாசன், கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம்பூபதி, வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்