கொத்தனார் மீது தாக்குதல்
சங்கரன்கோவிலில் கொத்தனார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் கக்கன்நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 50). இவர் ஒப்பந்த அடிப்படையில் கொத்தனார் வேலை செய்து வருகிறாா். பாரதிநகரில் உள்ள ஒருவர் வீட்டில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க ஒப்பந்தம் பேசியதாகவும், அந்த தொகையை வீட்டில் உள்ளவர்கள் சிறிது பாக்கி வைத்தாகவும் கூறப்படுகிறது. இதனால் இருதரப்புக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று சங்கரன்கோவிலில் ஒரு டீக்கடையில் பாக்கியராஜ் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த பாரதிநகரை சேர்ந்த மாரியப்பன், கருப்பசாமி உள்பட 4 பேர் சேர்ந்து பாக்கியராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் திடீரென இடுப்பில் வைத்திருந்த பீர்பாட்டிலால் பாக்கியராஜின் தலையில் அடித்து கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது. தலையில் காயம் அடைந்த பாக்கியராஜ் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாரியப்பன், கருப்பசாமி உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.