உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திருமருகல் வட்டார வள மையம் சார்பில் திட்டச்சேரி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலை பண்பாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் சந்தானம் தலைமை தாங்கினார். திட்டச்சேரி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நடராஜன் முன்னிலை வகித்தார். முன்னதாக வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் பிரபு வரவேற்றார். இதில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள், பயிற்றுனர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர்பயிற்றுனர் துர்க்கா நன்றி கூறினார்.