தேனி விளையாட்டு கழகத்தில் பயின்று போட்டித்தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
தேனி விளையாட்டு கழகத்தில் பயின்று போட்டித்தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.;
தேனி ரெயில் நிலையம் எதிரே தேனி விளையாட்டு கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நூலக வசதியுடன் இலவச பயிலகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் போட்டித்தேர்வுக்கு படித்து வருகின்றனர். இதற்கிடையே சமீபத்தில் வெளியான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவில், இந்த பயிலகத்தில் பயின்ற 14 மாணவர்கள் வெற்றிபெற்றனர். இதில், குபேந்திரன் என்ற மாணவர் மாநில அளவில் 17-வது இடத்தை பிடித்து சாதனை படைத்தார். அதேபோல் சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் 3 மாணவர்களும் வெற்றிபெற்றனர்.
இதையடுத்து போட்டித்தேர்வுகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில், தேனி விளையாட்டு கழக செயலாளர் கதிரேசன் கலந்துகொண்டு, மாணவர்களை பாராட்டி புத்தகம் வழங்கினார். இந்த விழாவில் விளையாட்டு கழக தலைவர் கருணாகரன், உபதலைவர் கணேஷ், உறுப்பினர்கள் பிரபாகரன், பி.பி.கணேஷ், பாண்டிக்குமார், குமரேசன், லீடர் பாலசுப்பிரமணி, டி.விஜய், சோமசுந்தரம், குட்டி ரமேஷ், தமிழரசன், சங்கர், மகேஷ், ஜெகதீஸ், டாக்டர் மோகனசுந்தரம், பா.ரமேஷ்குமார், சண்முகம், பழனிக்குமார், ராமகிருஷ்ணன், ஹோண்டா ரமேஷ், கார்த்தி மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் விளையாட்டு கழக தலைவர் கூறுகையில், தேனி விளையாட்டு கழக இலவச பயிலகத்தில் படிக்க விரும்பும் மாணவர்கள் தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வந்து படிக்கலாம். கடந்த 4 ஆண்டுகளில் இங்கு பயின்ற 81 மாணவர்கள் போட்டித்தேர்வுகளில் வெற்றிபெற்றுள்ளனர் என்றார்.