மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக டாக்டர் நாகராஜன் வெங்கட்ராமன் நியமனம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக மதுரையை சேர்ந்த டாக்டர் நாகராஜன் வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-10-22 20:04 GMT

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக மதுரையை சேர்ந்த டாக்டர் நாகராஜன் வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, கடந்த 2019-ல் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், தற்போது வரை மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் நடைபெறாமல் இருக்கிறது. சுற்றுச்சுவர் மட்டுமே கட்டுப்பட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் தற்காலிகமாக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவரை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மதுரையில் உள்ள வி.என்.நரம்பியல் சிறப்பு மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நாகராஜன் வெங்கட்ராமன், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நேரில் ஆய்வு

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தலைவராக அறிவிக்கப்பட்டிருப்பது, குறித்த உத்தரவு தற்போதுதான் கிடைத்திருக்கிறது. முதலில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தில் நேரில் ஆய்வு செய்ய இருக்கிறேன். இதுவரை நடந்தது குறித்த முழு விவரங்களை சேகரிக்க வேண்டி இருக்கிறது. மத்திய அரசும், மாநில அரசும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு முழு ஒத்துழைப்பு தருவார்கள் என நம்புகிறேன். அதன்படி அதற்கான பணிகள் துரிதப்படுத்தப்படும். எல்லா தரப்பினரையும் ஒருங்கிணைத்து எய்ம்ஸ் மருத்துவமனையை சிறப்பாக செயல்படுத்த பாடுபடுவோம்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை பார்க்கும்போது, மதுரையில் இதுபோல் வரவில்லை என வருத்தப்பட்டிருக்கிறேன். ஆனால், அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. நிச்சயம் மக்களின் ஒத்துழைப்புடனும், மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடனும் மதுரை எய்ம்ஸ் சிறப்பானதாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்