காவிரி பூம்பட்டினம் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
ஆய்வு
சீர்காழி ஒன்றியம் காவிரி பூம்பட்டினம் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்டு சாலை, பேவர் பிளாக் சாலை, மரக்கன்று நர்சரி, மீன் உலர் தளம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை நேற்று தமிழக குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனரும், மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அமுதவல்லி காவிரி பூம்பட்டினம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஊராட்சியில் பல துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் அவசியம் குறித்து ஊராட்சி தலைவர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
மனுக்கள்
தொடர்ந்து புதுகுப்பம் மீனவர் கிராமத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் ஊரக உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் போடப்பட்டுள்ள தார் சாலை பணியை பார்வையிட்டார். அப்போது மீனவர்கள் தங்கள் பகுதி கோரிக்கைகள் குறித்து அவரிடம் மனுக்கள் வழங்கினர். இதனைத் தொடர்ந்து பெருந்தோட்டம் ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் லலிதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் முருகண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், ஒன்றிய ஆணையர் இளங்கோவன், தாசில்தார் செந்தில்குமார், ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார், சீர்காழி வட்டார வேளாண்மை துணை இயக்குனர் ராஜராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சிகள் சரவணன், ஒன்றிய பொறியாளர் தெய்வானை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.