அங்காள பரமேஸ்வரி கோவில் மயானக்கொள்ளை-குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி
அங்காள பரமேஸ்வரி கோவில் மயானக்கொள்ளை-குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி நடந்தது.
துறையூர்:
துறையூர் பர்வதராஜ குலத்தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் மாசி மாதம் மகா உற்சவ விழா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் முதல் வருகிற 24-ந் தேதி வரை நடைபெறும் இந்த விழாவின் முதல் நாளான நேற்று முன்தினம் துறையூர் மூங்கில் தெப்பக்குளத்தில் இருந்து பக்தர்கள் பால்குடம், தீர்த்த குடம் உள்ளிட்டவை எடுத்து, வீதி வலம் வந்தனர். இதையடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கொடியேற்றம், காப்புக்கட்டுதல், எல்லை மறித்தல் உள்ளிட்டவை நடந்தது. பூங்கரகம், சக்தி கரகம், கட்டாரி பாலித்து திருவீதி உலா கோவிலை வந்தடைந்தது. மேலும் முக்கிய நிகழ்ச்சியான மயானக் கொள்ளையின் குட்டி குடிக்கும் நிகழ்ச்சி நேற்று பெரிய ஏரியின் பின்புறம் உள்ள மயானத்தில் நடைபெற்றது. இதில் மதியம் 12 மணியளவில் கோவிலில் இருந்து நறுக்குத்தேர் புறப்பட்டு பெரிய ஏரியின் கீழ்புறம் உள்ள மயானத்தின் பின்புறத்தில் பெரிய நாயகி அம்மனின் தெய்வ சரீரம் முன்பாக தேரை பக்தர்கள் எழுந்தருளச் செய்து, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின்போது திருமணமாகி குழந்தைப் பாக்கியம் வேண்டுபவர்களும், வேண்டுதல் நிறைவேறிய பக்தர்களும் காணிக்கையாக ஆட்டுக்குட்டியை கொண்டு வந்திருந்தனர். அருளாடி ஆட்டுக்குட்டியை வாங்கி குட்டிக்குடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. குழந்தைப் பாக்கியம் வேண்டும் பக்தர்களுக்கு அவ்விடத்தில் படையலிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது. இதனைப் பெற பெண்கள் கூட்டம் அலைமோதியது.
இதைத்தொடர்ந்து இன்று(திங்கட்கிழமை) அங்காள பரமேஸ்வரி அம்மன் புறப்பட்டு அய்யங்குளமேடு எனும் பகுதிக்கு வருகிறார். அங்கு பிள்ளைப்பாவு என்ற நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அதில் குழந்தைப் பாக்கியம் வேண்டும் பெண் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். 24-ந் தேதி காலை 10 மணிக்கு பெரிய திருத்தேர் புறப்பாடு நடக்கிறது. அதனைத் தொடர்ந்து மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகளை கோவில் கரைகாரர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.