இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி

சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு பதவி விலகக்கோரி ஊட்டியில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க.வினர் 232 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-11 18:45 GMT

ஊட்டி

சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு பதவி விலகக்கோரி ஊட்டியில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க.வினர் 232 பேர் கைது செய்யப்பட்டனர்.

முற்றுகை போராட்டம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசினார். இந்த கருத்து நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை கண்டித்து இந்து அமைப்புகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை கண்டித்தும், அந்த மாநாட்டில் பங்கேற்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலகக்கோரியும் பா.ஜ.க. வினர் நீலகிரி மாவட்டம் ஊட்டி மாரியம்மன் கோவிலில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர்.

232 பேர் கைது

இந்தநிலையில் நேற்று ஊட்டி ஏ.டி.சி. திடலில் பா.ஜ.க.வினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் மோகன் குமார் தலைமை தாங்கினார். பின்னர் அங்கிருந்து ஆன்மிகம் மற்றும் ஆலய வழிபாட்டு பிரிவு தலைவர் அம்பிகை கணேசன் தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட புறப்பட்டனர்.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதாக 48 பெண்கள் உள்பட 232 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் ஈஸ்வரன், நிர்வாகிகள் பரமேஸ்வரன், கே.ஜே.குமார், மாவட்ட பொருளாளர் தர்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்