நிதி முறைகேடு செய்ததாக புகார்:ஊராட்சி தலைவர், துணைத்தலைவரை தகுதி நீக்கக்கோரி வழக்கு- கலெக்டர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

நிதி முறைகேடு செய்ததாக ஊராட்சி தலைவர், துணைத்தலைவரை தகுதி நீக்கக்கோரி வழக்கில் கலெக்டர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-08-10 20:01 GMT


திண்டுக்கல் மாவட்டம் பழனி காவலப்பட்டியை சேர்ந்த பெரியதுரை, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

காவலப்பட்டி ஊராட்சி மன்ற தலைவரும், ஊராட்சி துணைத்தலைவரும் பல்வேறு பணிகளை செய்யாமலேயே செய்ததாக கணக்கு காட்டி பல லட்ச ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். ஊராட்சி நிதியை முறைகேடு செய்ததற்கு தகுந்த ஆதாரங்களோடு கடந்த ஆண்டு ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனரிடம் மனு அளித்து, அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அதன்பேரில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை அரசு நிதியை முறைகேடு செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

எனவே, பொதுமக்களின் வரிப்பணத்தையும், ஊராட்சி நிதியையும் கையாடல் செய்து தொடர் முறைகேட்டில் ஈடுபட்டு வரும் இருவரையும் தகுதிநீக்கம் செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தர், பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்