அகில பாரத இந்து மகா சபா நூதன போராட்டம்
திருச்செந்தூரில் அகில பாரத இந்து மகா சபா நூதன போராட்டம் நடத்தினர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் நகராட்சியில் சொத்து வரி பல மடங்கு உயர்ந்துள்ளதை கண்டித்து அகில பாரத இந்து மகா சபா சார்பில் நகராட்சி அலுவலகம் எதிரில் நேற்று காலை கண்களில் கறுப்பு துணி கட்டி, கைகளில் தட்டேந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு இந்து மகா சபா நகர தலைவர் மாயாண்டி தலைமை தாங்கினார். நகர பொது செயலாளர் மணி முன்னிலை வகித்தார்.
போராட்டத்தில், ஈடுபட்டவர்கள் நகராட்சியை கண்டித்து, கோஷங்கள் எழுப்பியதுடன் பொதுமக்களிடம் பிச்சை எடுத்தனர். அப்போது அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக இந்து மகாசபாவினர், பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 40 பேரை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.