பொங்கல் பண்டிகைக்காக அகப்பை தயாரிக்கும் பணி மும்முரம்
தஞ்சை அருகே பொங்கல் பண்டிகைக்காக அகப்பை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தஞ்சை அருகே பொங்கல் பண்டிகைக்காக அகப்பை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பொங்கல் பண்டிகை
பொங்கல் பண்டிகை என்பது உழவர்களின் திருநாள். தமிழர்களின் திருநாளான பொங்கல் திருவிழாவின் போது தான் தமிழர்களின் பாரம்பரியம் வெளிப்படும். கிராமங்களில் அதிகாலையில் வீடுகளின் முன்பு புத்தம் புதிய மண்பானையில் பொங்கலிடுவதை பார்க்க முடியும். நகர் பகுதிகளில் கியாஸ் அடுப்பில் பொங்கல் வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. அதுவும் சில்வர் பாத்திரங்களில் பொங்கலிட்டு வருகிறார்கள். ஆனால் கிராமங்களில் இன்னும் பொங்கல் பண்டிகையில் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பயன்படுத்தும் பொருட்களுள் ஒன்றுதான் "அகப்பை".
அகப்பை தயாரிக்கும் பணி
தஞ்சையை அடுத்த வேங்குராயன்குடிக்காடு என்ற கிராமத்தில் மட்டும் பொங்கல் தினத்தன்று அகப்பையை மட்டும் பயன்படுத்தி வருகின்றனர் அந்த கிராம மக்கள். இதற்காக அந்த கிராமத்தில் உள்ள தச்சுத்தொழிலாளர்கள் அகப்பையை தயாரித்து பொங்கல் தினத்தன்று காலையில் ஊர்மக்களிடம் வீட்டுக்கு வீடு சென்று வழங்கி விடுவார்கள். இந்த அகப்பைக்கு அவர்கள் பணம் பெறுவதில்லை. அதற்கு மாறாக ஒருபடி நெல்லும், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் மட்டுமே பெற்றுக் கொள்கின்றனர். இந்த வழக்கம் இன்றளவும் தொடர்கிறது.
இதுகுறித்து அகப்பை தயாரிப்பில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் கூறும்போது, எங்களது மூதாதையர் காலந்தொட்டு நாங்கள் தச்சுத்தொழிலில் தான் ஈடுபட்டு வருகிறோம். இந்த கிராமத்தில் 15-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோம். பொங்கல் பண்டிகை வந்து விட்டால் பாரம்பரியமான அகப்பை தயாரிக்கும் பணியில் ஈடுபடுவோம். இதற்காக ஆண்டுமுழுவதும் பயன்படுத்தப்பட்ட தேங்காய் கொட்டாங்குச்சியை சேகரித்து வைப்போம். பொங்கல் பண்டிகை நெருங்கும் நேரத்தில் 4 அல்லது 5 நாட்கள் தண்ணீரில் தேங்காய் கொட்டாங்குச்சியை ஊறவைத்து அதனை உளியால் பக்குவமாக செதுக்குவோம்.
தேங்காய், பழம்
மூங்கில் மரத்தினை வெட்டி அதில் 2 அடி துண்டுகளாக நறுக்கி கைப்பிடி தயாரித்து பின்னர் அதில் கொட்டாங்குச்சியை இணைத்துவிட்டால் அகப்பை தயாராகிவிடும். இந்த அகப்பையை நாங்கள் யாரும் விலைக்கு விற்பனை செய்வதில்லை. எங்களது கிராம மக்களுக்கு பொங்கலன்று பயன்படுத்த இதை தான் வழங்குகிறோம். பின்னர் பொங்கல் அன்றே மதியம் எந்தந்த வீடுகளுக்கு அகப்பை கொடுத்தமோ அங்கு சென்றால் அவர்கள் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, ஒரு படி நெல் கொடுத்து எங்களை கவுரவிப்பார்கள். இந்த பாரம்பரியம் இன்றளவும் தொடர்வதால் நாங்கள் இந்த தொழிலை மகிழ்வோடு செய்து வருகிறோம் என்றனர்.